ஜமால் ஹாஷோக்கி எங்கே...? - பகுதி 3

Views
#WhereIsJamalKhashoggi

“தம்பி.. இங்க வா..”

“சொல்லுங்கண்ணே..”

“உனக்கு ஹாஷோக்கி யார்னு தெரியுமா..?”

“தெரியும்னே..”

“அவர் உங்கிட்ட என்ன கேட்டிருந்தாரு..?”

“விவாகரத்து சர்டிபிகேட் ஒன்னு கேட்டிருந்தாருன்னே..”

“அத வாங்க உங்க தூதரகம் வந்தாரா..?”

“வந்தாருன்னே..”

“சர்டிபிகேட் குடுத்தியா..?”

“குடுத்தன்னே..”

“சரி.. இந்தா.. அவர் உள்ளே வந்தது கேமராவில் பதிவாகி இருக்கு.. அவரு வெளியே போனது எங்க...?”

“அட.. அவரு தான் தூதரகத்தின் உள்ளேயே இல்லையேண்ணே..!!”  

என்று கவுண்ட மணி - செந்தில் வாழைப்பழ காமடி போல் யார் என்ன கேள்வி கேட்டாலும் சவூதி “அவரு வாங்கிட்டு அப்பவே போயிட்டார்..!” என்று திரும்ப திரும்ப சொன்னதையே கூறிக் கொண்டிருந்தது.   

தட் “அவரு தான் தூதரகத்தின் உள்ளேயே இல்லையேண்ணே..” மொமென்ட் 😊

[இந்த தொடரின் தொடக்கத்திலேயே போட்டிருக்க வேண்டிய முக்கிய முன் குறிப்பு (Disclaimer) : (பிளாகில் இக்குறிப்பை முதல் பகுதியிலேயே போட்டுவிட்டேன். இங்க போட்டது FBயில் இருந்து நேரடியாக மூன்றாம் பகுதிக்கு வருபவர்களுக்காக.)

இந்த தொடரில் உள்ள தகவல்கள், சம்பவங்கள் எல்லாமே பல்வேறு சர்வேதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் மட்டுமே. (மேற்கோள்கள் (references) தொடரின் இறுதி பாகத்தில் வெளியிடப்படும்). இவைகளில் சில செய்திகள் அந்ததந்த அரசுகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சிலவை இதுவரை அரசுகளால் அதிகாரப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவை என்ற எண்ணத்தோடு இந்த தொடரை படிக்கவும்.]  

“என்னய்யா.. நம்ம ஆர்ம்ஸ் டீலுக்கு வந்த சோதனை..?”

ஜமால் ஹாஷோக்கி சவூதி அரசால் கொல்லப்பட்டு விட்டார் என்ற தகவலும், அதன் தொடர்ச்சியான வந்த தகவல்களினால் துருக்கி, அமேரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் எதிர்கட்சிகள் அந்தந்த நாடுகளின் அதிபர்களுக்கு சவுதியுடனான உறவை துண்டிக்க சொல்லி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

அமெரிக்காவின் செனட்டர்கள் ஆளாளுக்கு சவூதியைக் கண்டித்தும் அவர்களுக்கு என்னென பொருளாதாரத் தடைகள் விதிக்கலாம் என்றும் பட்டியலிட ஆரம்பித்தனர்.

அப்படி துள்ளிய செனட்டர்களை நோக்கி உடனே ட்ரம்ப் வடிவேலு ஸ்டைலில் “இவனுக வேற.. கொஞ்சம் வாய வச்சிக்கிட்டு சும்மா  இருங்கய்யா.. அந்த ஆளுக நம்ம கிட்ட 110 பில்லியன் டாலர்க்கு ஆர்ம்ஸ் டீல் சைன் பண்ணிருக்காங்க.. நம்ம பாட்டுக்கு மனித உரிமை காப்பாத்தறோம், அத காப்பாத்தறோம், இத காப்பாத்தறோம்னு சொல்லிட்டு அவங்க மேலே சேங்க்சன், கீங்க்சன் போடப் போனா.. அப்பறம் அவங்க பாட்டுக்கு அந்த டீல அப்படியே ரஷ்யா, சைனாக்கு குடுத்துருவாங்க.. அப்பறம் நமக்கு இங்க வேலை வாய்ப்புகளுக்குதான் பிரச்னை வரும்… அதனால அதெல்லாம் வேணா.... இரு, கொஞ்சம் லைட்டா மிரட்டி வைக்கிறேன்.. அப்பறம் பையன் எப்படி வழிக்கு வரான்ன்னு மட்டும் பாரு..” என்ற தொனியில் (பின்னே.. நம்ம பண்ணாத மனித உரிமை மீறலா..? 😉 ).. 

ஒரு பேட்டி அளித்தார்.. “வந்த செய்திகள் உண்மையாக இருந்தால்.. சவுதியே.. தெரிந்து கொள்..!! நீ கடுமையான தண்டனை சந்திக்க நேரிடும்..!” என்று எச்சரித்தார். (“Severe Punishment” என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்).  

அந்த பேட்டி வந்த அடுத்த நாளே சவூதி இப்படி ஒரு அறிக்கை விட்டது.. “கிங்டம் (அதாவது சவூதி) எல்லா வித குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறது. மேலும் அது தொடர்பான எல்லா மிரட்டல்களையும் புறக்கணிக்கிறது. எங்கள் மீது அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த நடவடிக்கை எடுக்கபட்டாலும் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்..!” என்று பதிலடியாக அறிக்கை விடவே.. 

“ச்சே.. சும்மா ஒரு மிரட்டல் கூட விடமாட்டங்கறானுகளே இந்தப் பையலுக.. அந்தப் பக்கம் வட கொரியாவோட கிம் என்னடான்னா..  எதாவது மிரட்டல் விட்டா.. கையில டென்னிஸ் பால வச்சிக்கிட்டு கிரிக்கட் விளையாட வரியான்னு கேக்கற மாதிரி ஹைட்ரஜன் பாம் டெஸ்ட் பண்ணி காட்டி ‘நீ ஒத்தைக்கு ஒத்த வரியா டீ..’ ன்னு கேக்கறான்.. இவன் என்னடான்னா.. ‘நீ நடவடிக்கை எடுத்துதான் பாரேன்…’ ங்கறான்.. வர வர அமேரிக்கா மேலே யாருக்கும் பயமே இல்லாமப் போச்சு.. ச்சை..” என்று நினைத்தாரோ என்னவோ.. 😃 

அந்த அறிக்கை வந்த சில மணிநேரங்களில் நேராக சவூதி மன்னர் சல்மானை போனில் அழைத்து “உங்களுக்கு என்ன தான்யா பிரச்னை..?” என்ற தொனியில் நேரிலேயே பேசிவிட்டார்.. 
    
மன்னர் சல்மானோ சவுதியின் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை ஆணித்தரமாக மறுக்க.. உடனே ட்ரம்ப்..

“அவரிடம் பேசியதில் இருந்து அவர் உறுதியாக மறுக்கிறார் (denial is very strong).. அது நம்பும்படியாக உள்ளது. அதனால் இது ஏதாவது rogue killers (முரடர்கள் / தாதாக்கள் / under world ஆட்கள்) வேலையாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.  நான் உடனடியாக எங்கள் உள்துறை அமைச்சர் போம்பியோ (Pompeo) வை சவூதி மன்னரை சந்திக்க அனுப்பி வைக்கிறேன்..” என்றார்.

சவூதி செய்திருக்காது என்ற தொனியில் பேசியர்தர்காக உடனே அமெரிக்காவில் பலர் ட்ரம்பை வசை பாட ஆரம்பித்தனர். 

ட்ரம்பும், MbSம் சவுதிக்கு ஆயுத விற்பனையின் வர்த்தகத்தை கையெழுத்திட்டபோது.  “என்னய்யா நம்ம ஆர்ம் டீலுக்கு வந்த சோதனை..!!” ட்ரம்ப் மைன்ட் வாய்ஸ். 

சவுதிக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னிடைவு 

ஹாஷோக்கி காணமல் போனது ஏன் சவுதிக்கு ஒரு பெரிய கரும்புள்ளியும் சவுதியின் முன்னேற்றத்தில் பெரும் தடையும், பேரிழப்பும் என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இப்போது நான் சொல்லப் போகும் இழப்பு தான் மிக முக்கியமான ஒன்றாகும்.

மன்னாராகப் போகும் இளவரசர் முஹம்மது பின் சல்மானின் brain child என்று அழைக்கப்படும் சவூதி அரேபியாவின் முக்கிய, ஆயிலை நம்பியிராத, எதிர்கால வளர்ச்சியை கொள்கையாக கொண்டு, மிகப் பெரும் முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் Vision 2030 திட்டம் (Project).  அந்த திட்டமானது பெரும்பாலும் அந்நிய நாட்டு பெருநிறுவனங்களின் முதலீடுகளை நம்பி இருப்பதால் உலகெங்கிலும் இருந்து பெரும் முதலீட்டாளர்கள், முக்கிய நிறுவனங்களின் முதலாளிகள் பங்குபெறும் "Davos in Desert" என்ற பெயரில் Future Investment Initiative (FII)  என்ற   ஒரு முக்கிய மாநாட்டை அக்டோபர் 23ம் தேதி சவூதி அரசு நடத்த திட்டமிட்டிருந்தது.  

அந்த மாநாடானது சவூதி அரேபியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஒரு முக்கிய மாநாடாக சவுதியாலும், உலக நாடுகளாலும் பார்க்கப் படுகிறது. 


சென்ற வருடம் நடந்த FII மாநாட்டில் MbS முக்கிய முதலீட்டாளர்களுடன்.

ஆனால் சவுதியின் துரதிஷ்டம்… இப்போது ஹாஷோக்கி பிரச்சனைக்குப் பிறகு அந்த மாநாடுக்கு வருவதாக இருந்த பல உலக முதலாளிகள், பொருளாதார நிபுணர்கள்,  தலைவர்கள் தாங்கள் பங்குபெறுவதில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தனர்.  சிலர் ஹாஷோக்கிக்கு என்ன ஆனது என்று தெரியும்வரை பின் வாங்குவதாகவும், இன்னும் சிலர் நிபந்தனை ஏதும் இல்லாமல் (unconditional)  பின்வாங்குவதாகவும் தெரிவித்தனர். 

உலக பிரசித்திபெற்ற பிஸினெஸ் மேக்னட்டும், முதலீட்டாளரும், விர்ஜின் நிறுவனங்களின் (Virgin Group) குழுமத்தலைவருமான ரிச்சர்ட் ப்ரான்சன் (Richard Branson), சவுதியின் Vision 2020ன் இரண்டு முக்கிய திட்டங்களுக்கு (Projects) ஏற்பதாகத இருந்த ஆலோசகராகர் பதவியையும்,   மேலும் சவூதி அரசாங்கம் Virgin Space நிறுவனங்களில் செய்வதாக இருந்த முதலீடுகளுக்கான பேச்சுவார்த்தைகளையும் ஹாஷோக்கியைப் பற்றி முடிவு தெரியும் வரை நிறுத்துவதாக அறிவித்தார்.     

அதே போல் உலக வங்கி,  Uber, AOL, Google, Ford, Standard Chartered, Credit Suisse, JP Morgan Chase, etc முதலான முக்கிய நிறுவனங்களும், Financial Times, Bloomberg, CNN and The New York Times, Economist and CNBC போன்ற முக்கிய ஊடகங்களும் அந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கு பெறுவதிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தனர்.  

சொல்லப்போனால் டிரம்ப்பின் மிரட்டுதல் எல்லாவற்றையும் விட இது தான் சவுதிக்கு ஹாஷோக்கி விசயத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஆகும். 

பாடக் கிளம்பிய வெள்ளச் சாமி

இந்த நிலையில் ட்ரம்ப் கூறியபடி அமெரிக்காவின் உள்துறை அமைச்சர்  போம்பியோ சவுதிக்கு சென்று அங்கே மன்னரையும், இளவரசரையும், பிறகு துருக்கியில் பிரதம மந்திரி எர்டோகனையும் சந்திக்க சென்றார்.

உலகம் இப்போது “சரி.. வெள்ளச் சாமி பாட கிளம்பிட்டான்..” என்பது போல் “அமேரிக்கா காரன் உள்ளே வந்துட்டான்.. இனி சீக்கிரம் உண்மை தெரிஞ்சிரும்..” என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது.  


அமெரிக்க உள்துறை அமைச்சர் போம்பியோ MbSஐயும், எர்டோகனையும் சந்தித்தபோது.

ஆனால் போம்பியோ இரண்டு நாட்டு தலைவர்களையும் சந்தித்து வந்துவிட்டு.. “சவூதிக்கும், துருக்கிக்கும் அவர்களின் விசாரனையை முடிக்க தேவையான நேரத்தை தருவோம்..!” என்று மட்டும் தான் கூறினார், புதிதாக வேறு எந்த தகவலையும் உலகிற்கு கூறவில்லை.  

அதனால் உலக ஊடகங்கள் எல்லாம் “உள்துறை அமைச்சர் போம்பியோ.. உண்மையில் நீ சவுதிக்கு போனியோ…?” என்பது போல் தான் அவரை பார்த்தது.., கேட்டது..! 😉😃😄 

அந்த பயணம் அமேரிக்கா ஏதோ ஒரு ஃபார்மாலிட்டிக்காக செய்தது போல் இருந்தது, அதனால் புதியதாக தகவல் ஏதும் வரவில்லை. ஆனால் உண்மையில் அங்கே என்ன பேசப்பட்டது, என்னே முடிவாகப்பட்டது என்றெல்லாம் வெளியில் அவர்கள் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

இந்நிலையில் துருக்கி விசாரணை அதிகாரிகளும், சவுதியின் அதிகார்களும் தூதரகத்தை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தார்கள். ஆனால் ஏதும் கிடைத்ததாக வெளியில் சொல்ல வில்லை. 


சவூதி தூதரகத்தை சோதனையிடக் காத்திருக்கும் துருக்கி (இடது) மற்றும் சவூதி அதிகாரிகள் (வலது).

அங்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதெ அந்த தூதரகத்தின் கவுன்சிலர் சவுதிக்கு சென்று விட்டார் என்ற புதிய தகவல் வந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  அது “எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல..” என்ற ஒரு நிலையை சொல்லாமல் சொன்னது போல தான் இருந்தது. 

இதே அவர் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் இப்படி ஒரு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது பயணம் செய்ய தடை விதித்திருப்பார்கள். ஆனால் அவரு அந்நிய நாட்டு தூதரக பதவியில் இருப்பவர் என்றதால் இப்படி விட்டிருக்கலாம், அல்லது சவூதி துருக்கியிடம் அவரை விட சொல்லி கேட்ருக்கலாம்.  ஆனால் என்னைக் கேட்டால் துருக்கி அவரை விசாரணை முடியவும் வரை விட்டுருக்க கூடாது என்பது தான் சரியானதாக இருந்திருக்கும். 

துருக்கி இப்பொழுது அந்த கவுன்சிலரின் வீட்டை சோதனை இடுவதாக அறிவித்து, அதனை தொடங்கியது. 

புயலைக் கிளப்பிய ஆடியோ ஆதாரம்

இந்நிலையில் சென்ற பகுதியில் துருக்கி அமெரிக்காவிற்கு தந்ததாக நான் கூறியிருந்த ஒரு ஆடியோ ஆதாரத்தில் உள்ள சில அதிர்ச்சிகராமான தகவல்களை துருக்கியின், அரசுக்கு ஆதரவான ஒரு பத்திரிக்கை வெளியிட்டது. அந்த பத்திரிகை மட்டுமல்லாது அத்தகவல்களை துருக்கியின் ஒரு விசாரனை அதிகாரியும் New York Times (NYT) பத்திரிக்கைக்கு தந்ததாக கூறி NYT வெளியிட்டது. 

அதில் வெளியாகி இருந்த தகவல்கள் இந்த விசயத்தில்  உச்சகட்ட  பரபரபை உருவாக்கியது. 

அதனை எல்லா ஊடகங்களும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது. 

அது என்ன ஆடியோ…? 

ஹாஷோக்கி இறப்பதற்கு முன்னாலும்  அதற்க்கு அப்பாலும் அந்த இடத்தில் நடந்த உரையாடல்களை கொண்ட, அதாவது ஹாஷோக்கயின் இறுதி நிமிடங்களை கூறும் மிக முக்கிய ஆடியோ  தான் அது. 

அது எப்படி கிடைத்ததாம்..?

அந்த ஆடியோக்கள் நான் சென்ற பகுதியில் குறுப்பிட்டிருந்த ஹாஷோக்கியின் ஆப்பிள் வாட்சிலிருந்து ஆப்பிள் கிளவுட் மற்றும் அவரின் மொபைல் போனுக்கு அனுப்பப்பட்டிருந்த ஆடியோக்கள் என்று அந்த துருக்கி அரசு ஆதரவு பத்திரிகை கூறுகிறது. 

அதாவது ஹாஷோக்கி தன் இறப்பையே பதிவு செய்து இருக்கிறார் என்று அந்த பத்திரிக்கை தெரிவித்தது.  


ஹாஷோக்கியின் ஆப்பிள் வாட்ச்.

சரி.. அந்த ஆடியோக்கள் என்ன கூறுகிறதாம்..?

அவைகள் ஒரு ஏழு நிமிடம் ஓடும் ஆடியோ(க்கள்) என்றும், அதில் ஹாஷோக்கி அலறுவதும், மற்றவர்கள் பேசுவதும், அவர் அலறிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு ஒரு ஊசி போடப்படுவதாகவும், பிறகு அவர் நிசப்தமாகி விடுவதகாவும் சொல்கிறது.  

அவர் விரல்கள் துண்டிக்கப்படுவதாகவும், ஆனால் அது அவர் உயிருடன் இருக்கும்போது நடந்தததா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்று கூறுகிறது.  

பிறகு அங்கே இருப்பவர்கள் அவரின் உடலை அறுத்து கூறு போடுவதாகவும், அப்போது அங்கே இருந்த தூதரகத்தின் கவுன்சிலர் “இதனை எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் என்னை பிரச்சனைக்கு உள்ளாக்குகிறீர்கள்.” என்று கூற அப்போது அங்கிருந்த ஒருவர் “நீ சவுதிக்கு திரும்பி வரும்போது உயிரோடு இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக் கொண்டு இரு!” என்று கூறுவதாகவும் கூறுகிறது.  

பிறகு அவருடைய தலையை வெட்டி, உடலை கூறு போடும்போது அங்கு இருந்த தடயவியல் மருத்துவ நிபுணர் மற்றவர்களிடம் அறுக்கும்போது ஹெட் போனில் இசையை கேட்டுக் கொண்டே செய்தால் டென்சன் ஏற்படாது எனவும், தான் இப்படித்தான் இந்த வேலையை செய்வேன் என்று கூறுவதாகவும் கூறுகிறது. (ஆமா.. இசை ஹராம் இல்ல..?? 😄 ) 

இவைகள் தான் அந்த ஆடியோவில் இருந்ததாக அனைத்து முக்கிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டது. 

ஆப்பிள் வாட்சில் இவைகள் எல்லாம் பதிவு செய்து கொண்டிருந்ததை அறிந்து கொண்ட அந்த சவூதி ஏஜெண்டுகள்.. சில பாஸ்வேர்டுகளை வைத்து அவைகளை திறக்க முயன்று இருக்கிறார்கள் என்றும், அது தோல்வியில் முடிய.. இறுதியில் ஹாஷோக்கியின் கை விரலை வைத்து Finger print scanner மூலம் ஆப்பிள் வாட்சை திறந்து, ஆப்பிள் கிளவுடுக்கு சென்று அங்கிருந்த ஆடியோக்களை அழித்து விட்டதாகவும், இருந்தாலும் சில ஆடியோக்கள் அழிக்க முடியவில்லை என்று கூறியிருந்தது.  

இன்னொரு தகவலை இந்த இடத்தில் சொல்ல வேண்டும்.. சவுதியிலிருந்து வந்த 15 பேர் அடங்கிய குழுவிலிருந்த அந்த தடயவியல் நிபுணர், அவர் வரும்போது Bone saw (எழும்புகளை அறுக்கும் கருவி) யை தன்னுடன் எடுத்து வந்ததாக ஏற்கனவே துருக்கியின் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் ஊடகங்களுக்கு கூறியிருந்தனர். அக்கருவியை வைத்து தான் ஹாஷோக்கி கூறு போடப்பட்டிருக்கிறார் என்று NYT தெரிவித்து விட்டு, ஆனால் NYT தனக்கு இரகசிய தகவல்கள் தந்து கொண்டிருக்கும் ஒரு சவூதி அதிகாரியை இது பற்றி விசாரித்ததாகவும், அவர் அந்த தடயவியல் நிபுணர் அப்படி ஒரு கருவி எல்லாம் கொண்டு வரவில்லை, அவர் வந்தது ஹாஷோக்கியின் கொலையை எந்த தடயமும் இல்லாமல் அழிக்க மட்டும்தான் என்று சொன்னதாகவும் கூறுகிறது.    

எப்படி இருக்கும் அந்த ஆடியோக்களைப் பற்றிய தகவல்கள் எல்லாம் படிப்பவர்களுக்கு. சும்மாவே சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.. இப்படி ஒரு தகவலும் வந்ததும். இளவரசர் முஹம்மது பின் சல்மானை MbS என்று ஷார்ட் ஃபார்மில் அழைத்துக் கொண்டிருந்தவர்கள்.. இப்போது MbS என்றால் #MohammedBoneSaw என்று ஹேஸ்டேக் போடும் அளவுக்கு கண்டிக்க ஆரமபித்து விட்டார்கள் சில ட்விட்டராட்டிகள்.

துருக்கி பத்திரிகை வெளியிட்ட சவுதியிலிருந்த வந்த அந்த 15 பேர்களைக் கொண்ட குழு

ஆடியோ மூலத்தை சந்தேகிக்கும் CNN

ஆனால் இந்த செய்திகளை பதிவு செய்த CNN ஊடகமோ.. அந்த ஆடியோக்களின் மூலத்தை (source)ஐ பற்றி சில நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது. 

இந்த தகவல்களை ஆராய்ந்த CNN ஊடகத்தின் இன்வெஸ்டிகேசன் டீம் சொல்வது இதுதான். 

முதலில் ஆப்பிள் வாட்ச்சில் இப்படி கைவிரல் ரேகையை வைத்து திறக்கும் finger print scanner என்ற ஒரு அம்சமே (feature) இல்லை. 

இரண்டாவது ஆப்பிள் வாட்ச்சை மொபைலுடன் ப்ளூடூத் மூலமாகத்தான் கனேக்ட் செய்ய முடியுமென்பதால் தூதரகத்தின் உள்ளே ஏதோ ஒரு அறையில் நடைப்பவைகள் வெளியில் அவ்வளவு தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அவரின் வருங்கால மனைவியின் கையில் இருந்த ஹஷோக்கியின் மொபைல் போனுடன் ப்ளூ டூத்தால் கனெக்ட் செய்ய முடியாது..

என்ற இரு முக்கிய டெக்னிக்கல் கேள்விகளை தொடுத்தது. 

ஆனால் அவர்களே இந்த ஆடியோக்கள் எப்படி கிடைத்திருக்கும் என்று வேறு ஒரு முக்கிய யூகத்தையும் சொல்கிறார்கள். 

அதாவது துருக்கி அரசு துருக்கியில் இருக்கும் அனைத்து அந்நிய நாட்டு தூதரகங்களின் சுவர்களில் அல்லது சில முக்கிய நாட்டு தூதரகங்களின் சுவர்களில் மட்டும்  ஒட்டு கேட்கும் transmitter களை பொருத்தியிருக்கும். அதன் மூலமாகத்தான் இந்த தகவல்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்த மூலத்தை சொன்னால் அது சவுதிக்கும், துருக்கிக்கும் உடனான உறவில் மட்டுமல்லாது அது சர்வேதேச சட்டத்தின் படியும் குற்றமாதலால் துருக்கி அந்த மூலத்தை கூறாமல் இது போன்ற ஆப்பிள் வாட்ச் போன்ற சில டெக்னிக்கள் ஜாலங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறது.    Why not..? Verily possible..!! 

அமெரிக்காவிற்கு இந்த ஆதாரங்களை தந்தும் சவுதிக்கு சென்ற அமெரிக்க அமைச்சர் போம்பியோ சவுதியை உண்மையை ஒத்துக் கொள்ள வைக்கவில்லை, சவுதியும் தேவையற்ற காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதால் துருக்கி வேறு வழியில்லாமல் தான் இந்த தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறது CNN. 

இந்த நிலையில் துருக்கிக்கு வந்த 15 பேர்கள் அடங்கிய  குழுவில் இருந்த ஒருவர் சவுதியில் ஒரு கார் விபத்தில் இறக்கிறார் என்ற செய்தியும் ஒரு பத்திரிக்கை வெளியிடுகிறது.
இதனிடையே தூதரகத்தின் கவுன்சிலரின் வீட்டை ஆய்வு செய்து முடித்திருந்த துருக்கி அருகில் உள்ள ஒரு காடுக்கு சென்று அங்கே ஏதாவது அவருடைய உடல் புதைக்கப்பட்டிருகாலாமா என்று ஆய்வு செய்ய தொடங்குகிறது. 

அதே சமயத்தில் அமெரிக்காவிலோ பலரும் ட்ரம்பை கண்டித்து கொண்டிருக்கும்போது அவர்.. “பாருங்க.. நீங்கள் என்ன வேணா சொல்லுங்க.. ஆனால் நான் அந்த ஆர்ம்ஸ் டீலை மட்டும் கேன்சல் பண்ணவே மாட்டேன்..”ன்னு சொல்லி தான் ஒரு பிஸினஸ் மேன் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்தார். 

ஒரு வழியாக வழிக்கு வந்த சவூதி

இந்த நிலையில் இப்படி உலகம் பூராவிலும் இருந்து கண்டனங்களும், நெருக்கடிகளும் வந்து கொண்டிருந்ததாலும், முக்கியமாக துருக்கி சில முக்கிய ஆதாரங்களை அவ்வப்போது வெளியிட்டு உண்மையை ஒத்துக் கொள்ள சொல்லி அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததாலும் இனி வேறு எந்த வழியிலும் தான் தப்பிக்க முடியாது என்ற உணர்ந்த, கடந்து இருபது நாட்களாக அவர் எங்கே என்றே எங்களுக்குத் தெரியாது என்று கூறிக் கொண்டிருந்த சவூதி.. கடந்த சனி அன்று காலை இந்த அறிக்கையை அவர்களின் அரசாங்க ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது. 

அதாவது.. பத்திரிக்கையாளர் ஜமால் ஹாஷோக்கி சவுதிக்கு திரும்பவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார் எனவும், அதற்க்காக அவரை கூட்டி செல்வதற்காக சவுதியிலிருந்து வந்திருந்த அதிகாரிகளுக்கும், அவருக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தை கை கலப்பாக (Fist fight) மாறி அதில் அவர் இறக்குமாறு ஆகிவிட்டது என்றும்,  

அதன் பிறகு அவர் இறந்ததை அங்குள்ள அதிகாரிகள் மறைக்க முயன்று துருக்கியில் இருக்கும் அவர்களின் உள்ளூர் ஆள் ஒருவரிடம் தந்து விட்டார்கள் அவர் அவ்வுடலை என்ன செய்தார் என்று தெரியவில்லை என்றும் அறிக்கை விட்டது. (ஒரு மூனாம்பு படிக்கிற பையன் கூட இப்படி.. அதாவது.. “அவன் என்ன செஞ்சான்னு எனக்கு தெரியல மிஸ்..” னு சொல்ல மாட்டான்.. 😄) 

மேலும்.. ஆகையால் இதில் தொடர்புடைய அந்த குழவில் வந்திருந்த சவூதி அரசின் உயர் அதிகாரிகளான இளவரசர் MbSன் ஆலோசகர், உளவுத்துறையின் துணைத் தலைவர் ஆகிய இருவரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும், மேலும் அக்குழுவில் வந்திருந்த / சார்ந்த  பதினெட்டு சவூதி குடிமகன்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் அறிக்கை விட்டது.  அதாவது ஹாஷோக்கி இறந்தது தெரியாமல் நடந்த ஒரு விபத்து என்று கூறுகிறது சவூதி.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து பல நாடுகள் உடனடியாக் சவூதியைக் கண்டிக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் எல்லாரும் ஹாஷோக்கி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்களே தவிர.. பெரிசால்லாம் ஒன்னும் கண்டிக்கல.. வெகு சில நாடுகள் தவிர.  ஆனால் வழக்கம் போல சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பறந்தது.  

அந்த அறிக்கையைத் தொடர்ந்து ட்ரம்பும் “இந்த வழக்கில் இது ஒரு முதல் நல்ல படி” என்று கூறினார். "எங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது, ஒவ்வொருவரும் நிறைய தடைகள் விதிப்பதை பற்றி கூறுகிறார்கள், ஆனால் அந்த டீல்ல மட்டும் கை வைக்க மாட்டேன்” என்று மனுஷன் அந்த டீல்லயே நின்னார்.  

சரி.. சவூதி ஒத்திகிருச்சு.. எல்லாம் பிரச்னை முடிஞ்சிருச்சு.. இனி துருக்கியும், மற்ற நாடுகளும், ஊடகங்களும் அவங்கவங்க வேலையே பாக்க போயிருவாங்கங்கன்னு நினைச்சேன்.. 

ஆனால்.. இதற்குப் பிறகு தான் சில அதிர்ச்சிகர, சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு புதிய தகவல்கள் எல்லாம் துருக்கியின் புலனாய்வுகளின் மூலம் வெளியே வந்து கொண்டிருக்கிறது..  

ஹாஷோக்கிக்கு டூப்பு தயார் செய்து இஸ்தான்புல் தெருக்களில் உலவவிட்டிருந்த சவூதி, உலகிற்கு Naked truthஐ அதாவது வெட்ட வெளிச்சமான உண்மையை அறிவிக்க போவதாக சூழுரைத்த துருக்கி,  அதனை துருக்கி பாராளுமன்றத்தில் அறிவித்த அதிபர் எர்டோகன், வழக்கம்போல் உலக நாடுகளில் முதன் முதலில் தடையை அறிவித்த அந்த வீராங்கனை, தன் முந்தைய அறிக்கையை மாற்றிய சவூதி.. இப்படி இன்னும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..

அடுத்த பதிவில்.


(உங்கள் கருத்துகளை கீழே அல்லது இங்கே பகிரவும்.)

    


  




Comments

Popular posts from this blog

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

நம்ம வீட்டுப் பிள்ளை

தவறான முன்னுதாரணம்..!