ஜமால் ஹாஷோக்கி எங்கே...?
#WhereIsJamalKhashoggi
கடந்த மூன்று வாரங்களாக அரேபிய உலகையும், மேற்குலகையும், ஏன் சர்வதேச அரசியலில் ஆர்வமுள்ள உலகெங்குமுள்ள மக்களையும் துளைத்துக் கொண்டிருக்கும், இந்நாடுகளின் சமூக வலைதளங்களிலும், ஊடங்களிலும் அதிகம் விவாதிக்கப் பட்ட கேள்வி இது தான்.
இரு வாரங்களுக்கு முன்னாள் நம் நாடு #MeToo வில் அடுத்தது யார் என்ற கேள்வியில் இருந்த போது.. உலகம் #WhereIsJamalKhashoggi என்ற கேள்வியில் பரபரப்பாக இருந்திருக்கிறது.
ஒரு ஜேம்ஸ் பான்ட் அல்லது டாம் க்ரூஸ் படங்களில் வரும் அரசுகளுக்கு இடையேயான உளவாளி (Spy) கதைகளை மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்து இப்போது அது சவூதி, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுக்கிடையே நட்புறவுகளை பாதிக்கும் பிரச்சினையாகவும் மேலும் இந்த நாடுகள் தொடர்பான அனைத்து நாடுகளுக்கிடையே ஒரு முக்கிய பேசுபொருளாக உலா வந்து கொண்டிருக்கிறது.
ஜமால் ஹாஷோக்கி, Image : Wikipedia
ஜமால் ஹாஷோக்கி (Jamal Khashoggi), வயது 59, சவுதியைச் சேர்ந்த ஒரு பிரபல பத்திரிக்கையாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர். அல் வத்தான், அராப் நியூஸ் போன்ற பிரபல அரேபிய பத்திரிக்கைகளில் Editor-in-Chief முதலான உயர் பதவிகளில் பதவி புரிந்த அரேபிய பத்திரிக்கை உலகில் பிரசித்திபெற்ற ஒரு பத்திரிக்கையாளர். ஒரு காலத்தில் சவூதி அரசு குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர் பிற்காலத்தில் அந்த நிலையிலிருந்து மாறி அவ்வொப்போது சவூதி அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும், குறிப்பாக விரைவில் சவூதி அரேபியாவின் மன்னராக பதவியேற்க இருக்கும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் (Mohammed bin Salman or MbS) ஆட்சியின் நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் முக்கிய விமர்சகராகவும் இருந்து வந்திருக்கிறார். சவுதி ஏமனில் நடத்தும் போரையும், சவுதியின் கத்தாருக்கு எதிரான நிலைப்பாடையும் எதிர்த்து எழுதி வந்தவர். கிட்டத்தட்ட் இரண்டு மில்லியன்கள் பேர் ட்விட்டரில் அவரை பின் தொடரும் அளவுக்கு அரேபிய, மேற்குல அரசியல், பத்திரிகை உலகுகளில் அவர் பிரபலம்.
சவூதி அரசாங்கம் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்பிற்க்கு தந்த அதீத ஆதரவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் ஹாஷோக்கியின் ட்விட்டர் கணக்கை சவூதி அரசாங்கம் சென்ற வருடம் முடக்கியது. அதன் பிறகு ஒரு ஆறு மாத காலம் அமைதியாக இருந்தவர், அநீதிகளுக்கு எதிரான தன்னுடைய குரல் நிறுத்தப்படுவதை பொறுக்க முடியாமல் சவுதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறி அங்கே Washington Post என்ற பிரபல பத்திரிக்கையில் Columnist ஆக எழுதி வந்தார். தான் சவுதிக்கு திரும்பினால் கைது செய்யப் படுவேன் என்றும் கூறி வந்திருக்கிறார்.
ஹாஷோக்கியின் மற்றொரு தோற்றம் - லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் உரையாடிக் கொண்டிருந்த போது Image : Reuters
ஹாஷோக்கியின் மூதாதையர்கள் சிலர் துருக்கியிலிருந்து சவுதிக்கு வந்தவர்கள் என்பதால் அவருக்கு துருக்கியிலும் சில உறவுகளும், குடும்பங்களும் இருக்கிறது.. ஆகையால் அங்குமுள்ள தன்னுடைய குடும்ப தொடர்புகளை பேணி வந்திருக்கிறார்.
இந்நிலையில் தான் அந்த விதிக்கப்பட்ட நாளான அக்டோபர் 2-ம் தேதி வந்தது.
அன்றும் அவர் துருக்கியில் தான் இருந்திருக்கிறார்.
அன்று தான் புதியதாக மணமுடிக்க இருந்த துருக்கியைச் சேர்ந்த, 36 வயது உடைய ஒரு பெண்ணுடன், தன்னுடைய முந்தைய திருமணத்தின் விவாகரத்து சான்றிதழ் வாங்க துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகம் வந்துள்ளார் ஹாஷோக்கி. அப்பெண்ணை வெளியில் நிற்கவைத்து விட்டு செல் போன்கள் உள்ளே எடுத்து செல்லக் கூடாது என்பதால் தன்னுடைய போனை அப்பெண்ணிடம் தந்துவிட்டு சரியாக மதியம் சுமார் 1:15 அளவில் தூதரகத்தின் உள்ளே சென்றிருக்கிறார் ஹாஷோக்கி.
ஹாஷோக்கியும் அவரை மணமுடிக்க இருந்தவரும். Image : Instagram - Hatice
ஆனால் உள்ளே சென்ற ஹாஷோக்கி வெகு நேரம் ஆகியும் திரும்ப வில்லை.
தூதரகத்தின் அலுவலக நேரம் முடியும் நேரம் மாலை 3.30 மணி.
வெளியில் நின்றிருந்த அப்பெண்மணி (அதாவது அவரின் fiancee) மாலை 4 மணி வரை தூதரகத்தின் வாசலில் காத்திருந்திருக்கிறார்.
ஆனால்.. ஹாஷோக்கி அவரிடம் திரும்பி வரவே இல்லை.
தூதரகம் அலுவலக நேரம் முடிந்து அலுவலர்கள் உட்பட அனைவரும் சென்றுவிட்டதைக் கண்ட அப்பெண்மணி அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் தன் நண்பர்களுக்கு தகவல்கள் தருகிறார். பிறகு தூதரகத்தின் அருகே சென்று அங்கே உள்ள காவலரிடம் கேட்டிருக்கிறார். அவர் உள்ளே யாரும் இல்லை என்று கூறிவிட்டார்.
இப்பொழுது அப்பெண் துருக்கி காவல்துறையில் அவரைக் காணவில்லை என்ற புகார் அளிக்கிறார்.
துருக்கி காவல்துறை விசாரிக்க தொடங்குகிறது.
துருக்கி காவல் துறை சவூதி தூதரக அதிர்கரிகளிடம் விசாரித்தபோது ஹாஷோக்கி வந்த ஒரு மணி நேரத்தில் தன் வேலையே முடித்துக் கொண்டு பின் வாசல் வழியாக வெளியே சென்று விட்டார் என்று கூறிவிட்டார்கள்.
அவர் பிரபலமான பத்திரிக்கையாளர், விமர்சகர் என்பதால் அவரைக் காணவில்லை என்ற இந்த தகவல் சவூதி, வளைகுடா, துருக்கி, அமெரிக்கா மக்களின் சமூக வலைதளங்களிலும், முக்கிய ஊடகங்களிலும் காட்டுத் தீ போல் பரவுகிறது.
“ஜமால் காசோக்கி எங்கே..?” என்ற கேள்வி அம்மக்களை துளைத்து எடுக்கிறது. சமூக வலைதளங்களிலும் #WhereIsJamalKhashoggi என்ற ஹேஸ்டேகிலும் #WhereIsJamal என்ற ஹேஸ்டேகிலும் ட்ரெண்ட் ஆகி பரவுகிறது.
துருக்கி காவல் துறை இப்போது அவரை இஸ்தான்புல் முழுக்க தேடுகிறது. அவர் எங்கும் கிடைக்க வில்லை.
ஒரு நான்கு நாட்கள் எல்லாப் புறமும் தேடிய, விசாரனை செய்த துருக்கி காவல் துறை நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருகிறது. அதனை உலகிற்கும் அறிவிக்கிறது.
அந்த தகவல் இது தான்…
“அன்று சவூதி தூதரகத்திற்குள் உள்ளே சென்ற காசோக்கி சவூதி தூதரகத்தை விட்டு வெளியே வரவே இல்லை..!
அவர் சவூதி தூதரகத்தின் உள்ளேயே சவூதி அரசாங்கத்தால் கொல்லப்பட்டு விட்டார்!”
இந்த செய்தி உலக அரங்கையும், உலக தலைவர்களையும் அதிர வைக்கிறது!
இஸ்தான்புல்லில் உள்ள அந்த சவூதி தூதரகம். Image : BBC/AFP
(அடுத்த பதிவில் தொடர்வோம்)
ஒரு முக்கிய குறிப்பு (Disclaimer) :
இந்த தொடரில் உள்ள தகவல்கள், சம்பவங்கள் எல்லாமே பல்வேறு சர்வேதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் மட்டுமே. (மேற்கோள்கள் (references) தொடரின் இறுதி பாகத்தில் வெளியிடப்படும்). இவைகளில் சில செய்திகள் அந்ததந்த அரசுகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சிலவை இதுவரை அரசுகளால் அதிகாரப்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவை என்ற எண்ணத்தோடு இந்த தொடரை படிக்கவும்.
#Khashoggi
#WhereIsJamalKhashoggi
(உங்கள் மேலான கருத்துகளை கீழே அல்லது இங்கே பகிரவும்.)
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள்..