ஜமால் ஹாஷோக்கி எங்கே...? - பகுதி 2

Views
#WhereIsJamalKhashoggi

சவுதியின் பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் ஹாசோக்கி சவூதி அரசாங்கத்தால் தூதரகத்தின் உள்ளேயே கொல்லப்பட்டு விட்டார் என்று வந்த அந்த அதிர்ச்சியான செய்தியால் உலகமே அதிர்ந்து போயிருந்தது. 

ஆனால் அதை விட அந்த செய்தியில் இன்னொரு உச்சம் உலகுக்கு காத்திருந்தது. 

அது காவல்துறையின் பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு உயர் அதிகாரி ஒரு பிரபல ஊடகத்திற்கு சொன்னது தான்.. 

“அவர் கொல்லப்பட்டு. பீஸ் பீஸ்ஸாக வெட்டப்பட்டு. துருக்கியிலிருந்து வெளியே எடுத்து செல்லப்பட்டு விட்டார். அவர்களுக்கு தந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது என்று தலைமைக்கு கூற இவை அனைத்தையும் முற்றிலும் வீடியோ ரெகார்ட் செய்யப்பட்டு அதுவும் நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டு விட்டது..!” என்ற தகவல்தான். 

அவ்வளவு தான்.. உலக நாடுகள் முழுவதும் இருந்து சவுதிக்கு கண்டனங்கள் வரத் தொடங்கிவிட்டது. 

ஆனால் சவுதியோ துருக்கியின் குற்றச்சாட்டுகளை இது அத்தனையும் அடிப்படை ஆதாரமற்ற வெறும் கதையே அன்றி வேறு இல்லை என்று கூறி மறுத்தது.  ஹாஷோக்கி்யை நாங்கள் கைது செய்யவும் இல்லை, கொல்லவும் இல்லை, அவர் அன்றே வேலையே முடித்துக் கொண்டு போய் விட்டார் என்று சொன்ன விசயத்தையே மீண்டும் சொன்னது.  
  
ஹாசோக்கி இந்த வழியாகத்தான் வெளியே சென்றார் என்று சொல்லும் சவூதி தூதரகத்தின் கவுன்சிலர். Image  Reuters

இப்போது தான் துருக்கி ஒரு கிடுக்குப் பிடியை சவுதிக்கு போட்டது.. அதாவது… இப்படி ஒரு கேள்வியை சவுதியிடம் கேட்டது.. 

“சரி.. நீங்கள் சொல்வது போலவே அவர் பின்வாசல் வழியாக வெளியில் சென்று விட்டதாகவே இருக்கட்டும். அவர் உள்ளே வந்த காட்சி வெளி வாசலில் வைக்கப்பட்டு இருந்த துருக்கி அரசின் CCTV கேமராவில் இருக்கிறது.. ஆனால் அவர் உள்ளே வந்தது, விவகாரத்து சர்டிபிகேட் வாங்கியது, பிறகு பின்வாசல் வழியாக வெளியில் சென்றதை எல்லாம் காட்டும் உங்கள் தூதரகத்தின் CCTV காட்சிகள் எங்கே..?”  என்று கேட்டது. 

அதற்கு அந்த உலகப் பிரசித்த பெற்ற பதிலை சவூதி தூதரகம் கூறியது. 

“அன்று தூதரகத்தின் உள்ளே CCTVக்கள் வேலை செய்யவில்லை..” என்று ஒரு போடு போட்டது. 

அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை.. உலகம் முழுவதிலுமே பிரச்சனைக்குரிய நாட்களில் மட்டும் இந்த CCTVக்கள் வேலை செய்வதில்லை.. அது போயஸ்கார்டனாக இருந்தாலும் சரி, அப்போல்லோவாக  இருந்தாலும் சரி, ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட சிறைச் சாலையாக இருந்தாலும் சரி, இஸ்தான்புல் சவூதி தூதரகமாக இருந்தாலும் சரியே..!!!  😄😄

ஹாஷோக்கி் தூதரகத்தின் உள்ளே நுழையும் CCTV காட்சி.  Image : Hurriyet, via AP
 
இப்போது துருக்கி இன்னொரு உறுதியான ஆதாரத்தை கொண்டு வந்து சவுதியை உலக நாடுகள் முன்னிலையில் இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. 

“சரி.. உங்கள் கேமராக்கள் வேலை செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் உங்கள் தூதரகத்தின் பின்வாசலுக்கு எதிராக இருக்கும் ஒரு Pre-schoolல் பொருத்தியிருந்த கேமராவை நாங்கள் ஆய்வு செய்ததில் அதில் அன்று முழுவதும் ஹாஷோக்கி் வெளியே வந்ததற்க்கான எந்த ஒரு காட்சிகளும் இடம் பெறவில்லையே.. ஏன்…?”  என்று ஒரு போடு போட்டது. 

“என்னய்யா இவன்.. எப்படி போனாலும் கேட்டப் போடறானே..? ச்சை..”  என்று சவுதி மிகவும் நொந்த சமயம் அதுவாகத்தான் இருந்திருக்கும். 

பிறகு துருக்கி அரசு.. சவூதி கவுன்சிலருக்கு உள்ளே வந்த ஹாஷோக்கி் வெளியே சென்று விட்டார் என்பதை நிருபிக்கும் ஆதாரத்தை தரக் கேட்டு சம்மன் அனுப்பியது. 

இதற்கிடையில் ஏற்கனவே உலக நாடுகள் முழுவதிலிருந்தும், சமூக வலைதளங்களிலும் சவுதியை எல்லாரும் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். 

இச்சமயத்தில் இன்னொரு புதிய தகவல் விசாரணையை சூடு பிடிக்க வைத்தது. 

ஹாஷோக்கி்யின் மொபைல் போன் தான் அவரிடம் இல்லை. ஆனால் அவர் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தார். அது அங்கே நடந்த நிகழ்வுகளை மற்றும் உரையாடல்களை அவரின் மொபைல் போனுக்கோ அல்லது ஆப்பிள் கிளவுட் (Apple Cloud) க்கோ தகவல் அனுப்பியிருக்கும். அதனால் காஷோக்கயின் ஆப்பிள் கிளவுட் ஐடியை ஆய்வு செய்தால் விசாரணையில் புதிய தகவல் கிடைக்கலாம் என்று தகவல் பரவ ஆரம்பித்து, துருக்கி புலனாய்வு டீம் இப்போது அதனையும் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.   

பிறகு ஒரு புதிய அதிர்ச்சிகரமான தகவல் துருக்கியின் விசாரணை குழுவின் பெயர் குறிப்பிடப்படாத sourceகளிடம் இருந்து Washington Post, New York Times போன்ற முக்கிய பத்திரிக்கைகளுக்கு போகிறது.  

அந்த செய்தி இதுதான்.. 

ஒரு பதினைந்து பேர்கள் அடங்கிய குழு ஒன்று சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவே இரு தனியார் விமானங்கள் மூலம் சவூதி தலைநகர் ரியாதிலிருந்து இஸ்தான்புல்லில் வந்து இறங்கினர். அந்த குழுவில் ஒரு மருத்துவர், ஒரு தடயவியல் மருத்துவ நிபுணர், இராணுவத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள், புலனாய்வுத் துறை ஆட்கள் போன்ற அந்த முக்கிய கொலையை கனகச்சிதமாக செய்து முடித்து உடலை துருக்கியிலிருந்து எடுத்து சென்று விட தேவையான துறைகளிளிருந்து ஆட்கள் கொண்டுவரப்பட்டு அவர்களை வைத்து நடத்தப்பட்டது தான் இந்த திட்டமிட்ட படுகொலை என்ற மிக அதிர்ச்சிகரமான தகவலை Washington Post வெளியிட்டது. 

கூடவே அதனை நிருபிக்கும் CCTV படங்களை வைத்து உருவாக்கப்பட்ட்ட ஒரு வீடியோவை அந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு தந்தனர்.  

அது பிரச்சனையை இன்னும் பரப்பிற்குள்ளாக்கியது. 

 
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு துருக்கி அதிகாரிகளால் தரப்பட்ட CCTV காட்சிகள் கொண்டு தயாரிக்கபட்ட்ட ஒரு வீடியோ.  ( இங்கே அழுத்தவும் )

ஒரு தனியார் விமானம் வருகிறது, விமான நிலையத்திலிருந்து ஆட்கள் வருகிறார்கள், விடுதிக்கு செல்கிறார்கள், விடுதியிருந்து கார்கள் தூதரகத்திற்கும், கவுன்சிலர் வீட்டுக்கும் செல்லும் காட்சிகள் கொண்ட வீடியோ தான் அது.   

ஆனால் அந்த காட்சிகளை வைத்து மட்டும் இவர்கள் தான் அந்த கொலையை செய்தனர் என்று அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாத நிலைதான் மீண்டும் நீடித்தது.  

ஆனால் துருக்கிக்கு அன்று வந்த டீமில் இருந்தவர்களில் சிலர் சவூதி அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும்,  குழுவில் இருந்த தடயவியல் நிபுணர் சவுதியின் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் மூத்த தடயவியல் நிபுணர் என்று சவுதியின் அரசு வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் துருக்கியின் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் தருகிறார்கள்.    

சரி.. இவ்வளவு ஆதாரம் இருக்கும்போது ஏன் துருக்கி மௌனம் காக்கிறது..? ஆதாரங்களை அதிகாரப் பூர்வமாக எடுத்து போட்டு சவுதியை அம்பலப் படுத்த வேண்டியது தானே என்று நமக்கு தோன்றினால் அதற்கு காரணத்தை அந்த ஊடகங்களே கூறுகிறது.. 

இந்த வீடியோவையும், உள்ளே என்ன நடந்தது என்று இருவர் பேசிக் கொள்ளும் இன்னொரு முக்கிய ஆடியோ ஆதாரத்தையும் துருக்கி அரசு அமெரிக்காவிற்கு தந்து விட்டது. சவூதி உடனான துருக்கியின் உறவுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் துருக்கி இந்த தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியே விடாமல் அமெரிக்காவிற்கு மட்டும் தந்து விட்டு அவர்களை வைத்து சவுதியிடம் டீல் பண்ண சொல்லி விட்டு அடக்கி வாசிக்கிறது என்று அந்த ஊடகங்கள் சொல்கிறது.     

இதற்கிடையில் உலக தலைவர்களும், ஊடகங்களும் சவுதியை கண்ணா பின்னவென்று கேள்விகள் கேட்கவே உச்ச பட்ச சூட்டை உணர்ந்து கொண்ட சவூதி மன்னர் சல்மான்.. 

“ஹாஷோக்கி் எங்கள் நாட்டு குடிமகன். அவருக்கு என்ன ஆனது என்பதைப் பற்றி மற்ற நாடுகளை விட எங்களுக்கு தான் அதிக கவலை இருக்கிறது. அவர் தூதரகத்தில் இருந்திருந்தால் எனக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.  துருக்கியின் விசாரணைக் குழு தாரளமாக எங்கள் தூதரகத்திற்குள் சென்று விசாரணையை தொடங்கலாம். நாங்களும் எங்கள் விசாரணை அதிகாரிகளை இஸ்தான்புல்லிற்கு அனுப்புகிறோம். எங்கள் அதிகாரிகளும் துருக்கி விசாரணை அதிகர்களுடன் சேர்ந்து எங்கள் தூதரகத்தில் ஆய்வு செய்வார்கள்..!” என்றொரு அறிக்கை விட்டார்.   

 
சவூதி தூதரகத்தின் வெளியே ஹாஷோக்கிக்கு ஆதரவாக குவிந்த போராட்டக் காரர்கள்.
Image : Ozan Kose/AFP - Getty Images

இதற்கிடையில் துருக்கி, அமேரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் எதிர்கட்சிகள் அந்தந்த நாடுகளின் அதிபர்களுக்கு சவுதியுடனான உறவை துண்டிக்க சொல்லி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 

அமெரிக்காவின் செனட்டர்கள் ஆளாளுக்கு சவூதியைக் கண்டித்தும் அவர்களுக்கு என்னென பொருளாதாரத் தடை விதிக்கலாம் என்று பட்டியலிட ஆரம்பித்தனர். 

(அடுத்த பதிவில் தொடர்வோம்.) 

#Khashoggi 
#WhereIsJamalKhashoggi 

(உங்கள் கருத்துகளை கீழே அல்லது இங்கே பகிரவும்.)

Comments

Popular posts from this blog

தவறான முன்னுதாரணம்..!

நிலாவுக்குப் பக்கத்தில் ஒரு பலா!

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...