கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...
என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார்.
https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0
இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள்
1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான். உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள். 2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்).
2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லது நெகடிவ் என்று ரிசல்ட் வந்து விடும்.
File photo: PTI (source: thefederal.com) |
3. டெஸ்ட் செய்ய வேண்டியதன் ஒரு முக்கிய தேவை காய்ச்சல் வந்தால் பலருக்கும் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள தனி கழிவறையுடன் கூடிய படுக்கையறை வசதி இருக்காது. அவர்கள் வீடுகளில் முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள் இருக்கலாம். ஆக இவர்கள் அந்த வீடுகளில் தங்கி, ஓய்வெடுக்கும் மேற்கூறிய அதிக ரிஸ்குள்ள வகையினருக்கும் நோயை கடத்தி அது அவர்களை தீவிர நோய் தொற்றில் கொண்டு விடலாம். அதுவே டெஸ்ட் செய்துவிட்டால் நமக்கு தனிமைப் படுத்திக் கொள்ள வசதி இல்லை என்றால் அரசு கொரானா பராமரிப்பு மையங்களுக்கு (Covid Care Centers) சென்று குறைந்தது ஐந்து நாட்களுக்காகவாது அங்கே தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
4. டெஸ்ட் செய்ய வேண்டியதன் இன்னொரு அவசியம், ரிசல்ட் பாசிட்டிவ் வந்தால் உங்களுக்கு ICMR எண் ஒன்று தருவார்கள்.. அது இருந்தால் உங்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படும்போது உடனடியாக செய்து கொள்ளலாம். அது இல்லை என்றால் நீங்கள் மருத்துவமனைகளை அவசரத்தேவைக்காக நாடும்போது அங்கே ஒருவேளை டெஸ்ட் ரிசல்ட் கேட்டால் பிரச்சினை ஆகிவிடும். அப்பறம் டெஸ்ட் எடுத்து ரிசல்ட்டுக்காக காத்திருந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டிவரும். (அறிகுறிகள் இருந்தாலே மருத்துவமனைகளில் அனுமதிக்க சொல்லி அரசு உத்தரவு வந்து தற்சமயம் நிலைமை மாறிவிட்டதா என்று தெரியவில்லை)
5. உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தாலும் பயப்பட தேவையில்லை. கொரனா வந்தவர்களில் 98% சதவீத மக்கள் குணமாகி வீடுகளில் நலமோடு இருக்கிறார்கள். நீங்களும் அந்த சதவீதத்தில் ஒருவர் தான், முழு நம்பிக்கையோடு இருங்கள். ஆனால் மருத்துவர்கள் சொல்லும் விஷயங்களை செய்யாமல், ஒரு இரு வாரங்களுக்கு நன்றாக ரெஸ்ட் எடுக்காமல் இருந்தால் பிரச்சினைகள் வரலாம்.
6. பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் உங்களை அருகில் உள்ள அரசு கொரானா பரிசோதனை மையங்களுக்கு அழைப்பார்கள். அங்கே உங்களின் அறிகுறிகளை (காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விட சிரமம், etc ) போன்றவகைளையும், உங்களின் ஆக்ஷிஜன் அளவையும் (SPo2) பரிசோதிப்பார்கள். உங்களுக்கு பயப்பட ஒன்றுமில்லை என்றால் உங்களுக்கு வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி இருந்தால் அதனை செய்ய சொல்வார்கள் (Home quarantine). ஒரு வேளை அந்த வசதி இல்லை என்றாலோ அல்லது உங்களுக்கு கண்காணிப்பு தேவை என்றாலோ கொரானா சிகிச்சை மையங்களில் (Covid Care Center) அட்மிட் ஆக சொல்வார்கள். பெரும்பாலான மக்களுக்கு இந்த இரண்டில் ஒன்றுதான் நடக்கும். ஆக டெஸ்ட் செய்யவில்லை என்றால் நீங்கள் இந்த அரசு பராமரிப்பு மையங்களை பயன்படுத்த முடியாது. மேலும் உங்களுக்கு காலை, இரவு சாப்பிட நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகளை தருவார்கள். சீரியஸாக உள்ளவர்களுக்கு அல்லது அதற்கு வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டும் தான் GHல் அனுமதிக்க சொல்வார்கள்.
7. அந்த அரசு பரிசோதனை மையங்களுக்கு செல்லும்போது அங்கே உங்களைப் போன்ற கொரானா தொற்று வந்தவர்களுடன் ஒரு இரண்டு மூன்று மணிநேரங்கள் நீங்கள் காத்து இருக்க வேண்டியிருக்கும். உங்களுடன் கொரானா பாதிப்பு இல்லாத உங்கள் உறவினர் / நண்பரை அழைத்து செல்கிறீர்கள் என்றால் அவர்களை அந்த கூட்டத்தில் கலக்க வைக்காதீர்கள். அவர்களை தனியே இருக்க சொல்லிவிட்டு நீங்கள் மட்டும் அங்கே உள்ள இருக்கைகளில் மற்றவர்களுடன் அமர்ந்து அங்கே சொல்லும் படிவங்களை நிரப்பி காத்திருங்கள். உங்கள் பெயர் வந்ததும் உங்களை பரிசோதித்து விட்டு மேலே சொன்ன தேவையான நடவடிக்கைகளை எடுக்க சொல்வார்கள்.
8. உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் டிவி செய்திகள் பார்ப்பது, சமூக வலைதங்களில், வாட்ஸப்களில் கொரானா தொடர்பான துர் செய்திகளை வாசிப்பதை உடனடியாக நிறுத்தி விடவேண்டும். அந்த செய்திகளே நம்மை பாதி கொல்லும். மருத்துவர் சொன்ன வழிமுறைகளை மட்டும் செய்துகொண்டு இருந்துவிட வேண்டும். மேலும் உங்களை போன் மூலம் நலம் விசாரிப்பவர்கள் யாரும் நாட்டில் கொரானாவினால் ஏற்படும் மரணங்கள், துர்சம்பவங்கள், மற்றவர்களுக்கு ஆக்ஷிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது போன்ற எதிர்மறையான (நெகடிவான) விஷயங்களைப் பற்றி உங்களிடம் பேசாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவு முதல் 10 நாட்களுக்காவது உங்களை யாரும் கால் பண்ணாமல் இருந்தால் நல்லது. உங்களுக்கு போரடித்தால் நல்ல புத்தகங்களை படியுங்கள்.
9. அடுத்தது நீங்கள் செய்யவேண்டியது தான் ரொம்ப முக்கியமான செயல். ஓய்வு, ஓய்வு, ஓய்வு..!!! நீங்கள் ஓய்வெடுத்தால் தான் உங்கள் இம்முனிட்டி எனும் நோயெதிர்ப்பு சக்தி வேலை செய்து, கொரானாவை உங்கள் உடலில் இருந்து வெளியேற்றும். நல்ல சத்தான, ஜீரணமாகும் ஆகாரங்களை உண்டு கொண்டு, நிறைய (சூடான) நீரையும் அடிக்கடி அருந்திக் கொண்டு ஓய்வெடுத்தால் தான் அந்த உணவின் சக்தியும், உங்களின் ஓய்வும் நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்து கொரானாவை உடலிலிருந்து விரட்டும். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம்.. இரவில் நன்றாக உறங்க வேண்டும். பகலில் சோர்வாக இருந்தால் சிறிது உறங்கிக் கொள்ளலாம்.. ஆனால் பகலெல்லாம் உறங்கிவிட்டு இரவில் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருக்க கூடாது. இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு உணவை விரைவில் முடித்துக் கொண்டு விரைவில் தூங்க செல்ல வேண்டும்.
10. வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளவும். ரூ.3000 க்குள் தான் வரும். வாங்கும்போதே கடைக்காரரிடம் எப்படி பயன்படுத்துவது என்று டெமோ கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். பயன்படுத்த தெரியவில்லை என்றால் அதில் வரும் அளவுகளை பார்த்தும் நமக்கு பீதி உண்டாகும். உங்களுக்கு மூச்சிரைப்பு, இளப்பு அல்லது மூச்சு திணறல் போன்று ஏதாவது வந்தால் அப்போது ஆக்ஷிஜன் அளவை பரிசோத்திக் கொள்ளுங்கள். 94க்கு குறைவாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும். இல்லையெனில் பயப்பட தேவையில்லை.
11. மூன்று வேளையும் ஆவி பிடித்தல், வெந்நீரில் தொண்டை கொப்பளித்தல் தேவை. ஒவ்வொருவரும் வெவ்வேறு மூலிகைகளை போட்டு ஆவி பிடிக்க சொல்வார்கள். அதற்கு வாய்ப்பும், நேரமும் இருந்தால் பரவா இல்லை, இல்லை என்றால் ஆவி பிடிப்பதற்கான பச்சை நிற டுயூப் மாத்திரைகளை (Karvol plus) மருத்துவரை கேட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று வேளையும் தண்ணீரை அடுப்பில் வைத்து சூடு பண்ணிக் கொண்டிருப்பது கடினம். கெட்டில் (Kettle) வாங்கி வைத்து கொள்ளுங்கள், ஆயிரம் ரூபாய்க்குள் தான் வரும். இந்த நேரத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும்.
12. வீடுகளில் கோரன்டைன் இருப்பவர்கள் ஏதாவது சந்தேகங்கள் நிவர்த்தி செய்து கொள்ள தெரிந்த மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி தெரிந்த மருத்துவர்கள் யாரும் இல்லாதவர்களுக்கு சில எண்களை கீழே தந்துள்ளேன். நான் பயன்படுத்தி மருத்துவரிடம் பேசி ஆலோசனை பெற்றேன்.
தமிழக அரசு ஹெல்ப் லைன் : 104, சந்தேகங்கள் : 044-25384530
ஸ்டார் இன்சூரன்ஸ் ஆன் கால் டாக்டர் செயலி: "Talk to Star" என்கிற ஒரு செயலி உள்ளது.
(வேறு எண்கள் தெரிந்தவர்கள் பின்னூட்டங்களில் சொல்லுங்கள். )
13. ப்ரோனிங் மற்றும் மூச்சுப் பயிற்சி: ப்ரோனிங் (Proning) முறையில் உறங்குவது மிகவும் பயனுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனை தெரிந்துகொண்டு முடியும்போதெல்லாம் செயல்படுத்துங்கள். மூச்சுப் பயிற்சி தெரிந்தவர்கள் சிறிய சிறிய மூச்சுப் பயிற்சிகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து கொள்ளலாம். இந்த இரண்டும் நுரையீரலுக்கான ஆக்ஷிஜன் ஓட்டத்தை சீராக்கும்.
14. தொழுகை: என் சக இஸ்லாமியர்களுகான டிப்ஸ். தொழுகை நேரம் வந்ததும் சோம்பேறித்தனம் பார்க்காமல் எழுந்து தொழுது விடுங்கள். ஒழு செய்வதற்கு கடினமாக இருந்தால் தயமும் செய்து கொள்ளலாம். என்னுடைய அனுபவத்தில் ஒவ்வொரு முறை நான் தொழுது முடிந்ததும் உடலாலும், உள்ளத்தாலும் புத்துணர்ச்சியை உணர்ந்தேன்.
இவையெல்லாம் என்னுடைய அனுபவத்திலிருந்து எழுதும் சில குறிப்புகள்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் இப்பெருந்தொற்றிலிருந்து விரைவில் மீட்பானாக..!!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள்..