நம்ம வீட்டுப் பிள்ளை

Views

"சொந்தங்களை மாதிரி யாரும் சந்தோசப்படுத்தவும் முடியாது.. சொந்தங்களை மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது..!!"

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அன்று பல நாட்களுக்குப் பின்னால் எங்கள் நெருங்கிய சொந்தங்களுடன் பெற்றோர்கள் வசிக்கும் வீட்டில் ஒரு கேதரிங் நடந்தது.  அனைவரும் சேர்ந்து படம் பார்த்து வெகு நாட்கள் ஆனதால் மதிய உணவுக்குப் பிறகு OTT யில் ஒரு படம் பார்க்க முடிவு செய்தோம்.

அப்போது இந்தப் படம் என்னுடைய அக்கா மகளாலும், அவருடைய கணவராலும் என்னிடம் பரிந்துரைக்கப்பட்டது.  இப்படம் ரிலீஸ் ஆனபோதே அக்கா மகளும், சொந்தங்களில் உள்ள சில இளவட்டங்களும் என்னிடம் இப்படத்தைப் பார்க்க சொன்ன போது.. காரணம் கேட்டதற்கு.. அண்ணன் - தங்கை பாசம் கதை என்றார்கள்.. "ம்க்கும்.. எவன் இதற்கெல்லாம் *நேரத்தை வேஸ்ட்* பண்ணுவான்..!!" என்று மனதில் எண்ணிக்கொண்டு அந்த ஒரு காரணத்திற்காகவே அப்படத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் அன்றும் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு காமடி படம் பாக்கலாம் என்றேன், மனைவி வழக்கம்போல் திரில்லர் என்றார், அம்மாவும் ஏற்கனவே இப்படம் பார்த்து விட்டதால் வேண்டாம் என்றார், ஆனாலும் அக்கா மகள் என்னை வற்புறுத்த.. சரி ஓட்டெடுப்பு போகலாம் என்றேன்.  அதில் இப்படமே ஒரு ஒட்டு அதிகம் வாங்கி வெற்றி பெற்றது.. என் மகள் உட்பட இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆகையால் பார்க்க தொடங்கினோம்...


நல்ல குடும்ப சித்திரம்.. இயக்குனர் பாண்டியராஜ் மண் சார்ந்த குடும்ப திரைப்படங்களை எடுப்பதில் தன்னை சிறந்தவராக நிரூபிக்கிறார். இவர்தான் நாங்கள் குடும்பமாக சேர்ந்து இதற்கு முன்பு இறுதியாக சென்ற ஆண்டில் பார்த்த "கடைக்குட்டி சிங்கம்" என்ற படத்தையும் எடுத்த இயக்குனர் என்பது அன்றைய ஒரு coincidence.

நிறைய கதாபாத்திரங்களும், நிறைய காட்சிகளும் அமைத்து கதையோடு அதன் தொடர்ச்சியை கொண்டு செல்ல அருமையாக எடிட்டிங் செய்து அசத்தி உள்ளார்கள்.  இப்படி ஒரு எடிட்டங்கா என்று வியந்தேன்.  (எடிட்டிங் யார் என்றும் பார்க்கவேண்டும்.)

சரி கொஞ்சம் கதைக்கு வருவோம்..  

படத்தின் ஆரம்பத்தில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் காட்சிகளிலேயே நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜா.. "இது இன்றைய பாசமலர் கதை" என்று ஒரு இரண்டு தடவையாவது சொல்லி விடுவார்.. அதிலிருந்தே நாம் கதையின் போக்கை கொஞ்சம் யூகிக்க முடியும். 

அண்ணன் - தங்கை பாசம், உயிர் நண்பர்கள் நட்பு, சுயநல சொந்தங்கள், மச்சான் - மச்சினன் பிரச்சினை பாசமலர் கதை, etc .. என இப்படி எல்லா சப்ஜெக்ட்களையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான குடும்ப சித்திரம்.     

[Now my mind voice time... அது சரி இயக்குனரே.. கல்யாணம் ஆனாலும் அண்ணன்களை விட்டு கொடுக்காத தங்கைகளை அன்றைய 1970 திரைப்படங்களில் காட்டலாம்... ஆனால் இந்த 2020ல் எல்லாம் காட்டுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா..?? 😄😄  ஒருவேளை இன்றைய காலகட்டத்திலும் அங்கொன்னும் இங்கொன்னுமாக இருப்பார்கள் போலும்.. நமக்கு தான் தெரியவில்லை. அருள் செய்யப்பட்ட அண்ணன்கள்..!!! ] 

இப்பதிவின் ஆரம்பத்தில் நான் எழுதியிருக்கும் வசனமும், "உறவுகளிடம் தோற்க்க முடிவு செய்தவனை யாராலும் ஜெயிக்க முடியாது..!" போன்ற வசனங்கள் எல்லாம் இப்படத்தை தூக்கி நிறுத்தும் வசனங்கள்.

சிவகார்த்திகேயன் அண்ணனாக இயற்க்கையாக நடிக்கிறார். படத்தில் வரும் அண்ணன் - தங்கயை பார்ப்பதற்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது.  😊😔 

இசை - இமான். பாடல்கள் அனைத்தும் இனிமை.  "உன் கூடவே பொறக்கணும்", "மயிலாஞ்சி.." பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். 

["உன் கூடவே பொறக்கணும்" பாடலில் வரும் சில காட்சிகள் மட்டும் தான் என்னவோ செய்தது.]

ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஒரு நிறைவான குடும்ப சித்திரம். 

எப்ப பார்த்தாலும் ரவுடி, கேங்ஸ்டர், கொலை, பேய், குழந்தைகளை கொல்லும் சைக்கோக்கள் போன்ற  கதை களங்களையே அதிகமாக வைத்து போய்க்கொண்டிருக்கும் இன்றைய தமிழ் சினிமாவில்.. பழைய தமிழ் சினிமாக்கள் பாணியில் இது போன்ற குடும்ப கதைகளங்களை மையமாக வைத்து படங்கள் வருவது இன்றைய காலத்தின் தேவை. சமூகத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

முடிவுரையாக...

அண்ணனாக பிறப்பது ஒரு வரம்.. ஒரு நல்ல அண்ணனுக்கு தம்பி, தங்கையாக பிறப்பதும் ஒரு வரம்.. ஆனால் இதை எல்லாம் விட அவர்களின் இறுதி நாள் வரை சிறிய வயதில் இருந்த அதே பாசத்தோடும், உறவோடும் வாழ்ந்து மறைவது வரத்திலும் வரம்..!!

அது பல பேருக்கு வாய்ப்பதில்லை.. 

அது பெற்றவர்கள் அருளப்பட்டவர்கள்..!! 

அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இறுதி நாள் வரை அது நீடிக்க என் பிரார்த்தனைகள்..!!!

Comments

Popular posts from this blog

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

ஏன் இந்த தயக்கம்..?