சாபம் இறங்கப்படலாம்!

Views

இதோ இந்த வருடமும் மூன்று குழந்தைகள் இறந்திருக்கிறது.  மூன்றும் நன்றாக படித்து வந்த ஏழைக் குழந்தைகள்.  தம் ஏழைக் குடும்பங்களின்  எதிர்காலத்திற்காக அப்பிள்ளைகள் சுமந்திருந்த எத்தனையோ கனவுகள், தன் துயரங்களை எல்லாம் துடைக்கப் போகிறார்கள் என்று அந்த குடும்பங்கள்  வைத்திருந்த எத்தனையோ நம்பிக்கைகள், கண்டிருந்த கனவுகள் எல்லாம் இதோ நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது!!

Pic source: BBC Tamil

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் இது நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு வரும்போது நமக்கும் சேர்த்து பதட்டம் தொற்றிக் கொள்கிறது.  ஒன்றல்ல.. இரண்டல்ல.. இந்த ஐந்து  ஆண்டுகளில் நீட் தொடர்பாக இதுவரை 16 மாணவர்கள் மாண்டிருக்கிறார்கள் என்பதனை எப்படி நம்மால் சுலபமாக கடந்து செல்ல முடிகிறது...?? ஒவ்வொரு ஆண்டும்  இந்த செய்திகள் கேள்விப்படும்போது நம் மனநிலையும் சேர்ந்து  பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா..? எவ்வளவு எதிர்மறையான சூழலில் நாம் வாழ்கிறோம்..! அத்தனையும் அப்பாவி குழந்தைகள்.. அந்த குடும்பத்தின், இந்த நாட்டின், இந்த நாட்டு மக்களின் வருங்கால செல்வங்கள்..!!!  ப்ச்ச்... அவர்களும் நம் பிள்ளைகள் போன்று தானே!

நீங்கள் நீட் ஆதரவாளராக இருங்கள், எதிர்ப்பாளராக இருங்கள்.. ஆனால் இந்த இருவருமே ஏற்றுக் கொள்ள முடியாதது ஒன்று உண்டென்றால் அது இந்த மாணவர்களின் சாவுகளை!!

நீட் சரியா.. தவறா.. என்ற விவாதத்திற்குள் நான் இப்பதிவில் செல்ல விரும்பவில்லை. அதனை பற்றி பலரும், பல தளங்களில் விவாதித்துள்ளார்கள், இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உரையாடல்கள், விவாதங்கள் எல்லாம் ஒரு புறம் சென்று கொண்டிருக்க இதுவரை 16 அப்பாவி ஏழை மாணவர்களை இழந்திருக்கிறோம்.

ஆனால்.. கொடுமை என்னெவென்றால்.. மாடுகளும், யானைகளும் செத்தால் பொங்கி எழும் இந்நாட்டில் 16 மாணவர்கள் செத்தும் மயான அமைதி..!!

இரண்டு நாட்கள் நீட்டுக்கு எதிர்ப்பு, எதிர்ப்புக்கு எதிர்ப்பு, மாணவர்களுக்கு அறிவுரை, இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல், இழப்பீடு தொகை அறிவிப்பு, எல்லாம் செய்துவிட்டு.. அவரவர் வேலைகளுக்கு, அடுத்த சம்பவங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சென்று விடுகிறோம்.

எத்தனையோ சம்பவங்களில் தானாக முன்வந்து சுயோ மோட்டோ விசாரணை செய்த நம் நீதிமன்றங்கள் 16 மாணவர்கள் செத்தும் நெடிய உறக்கத்தில்!

அதே போல ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் கப் சிப்..!!

ஏன்.. செத்தது எல்லாம் கேக்க நாதியற்ற குடும்பத்தின் பிள்ளைகள் என்பதாலா...? அதனால் தான் யாருக்கும் வலிக்கவில்லை போலும்...!!  இந்த நாடு உருப்படும் என்று நினைக்கிறீர்களா...???

அந்த மாணவ செல்வங்களின் மரணங்களுக்கு நீட்டை காரணமாக ஒரு சாரார் கூறினால்.. ஏன் தமிழகத்தில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.. இதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது என்கிறார்கள் எதிர் சாரார்.

நீட்டா.. அல்லது அரசியலா.. அது எதுவாக இருந்தாலும் சரி.. இந்த மாணவர்களின் இறப்புகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நீதியை நிலைநாட்டிட, அனைத்து மக்களுக்கும் நீதி செலுத்திட நினைக்கும் ஒரு அமைப்பாக இந்நாட்டின் நீதிமன்றங்கள் செயல்பட நினைத்தால்.. உடனடியாக நீட் விஷயத்திலும், தமிழகத்தில் நிலவும் இறப்புகள் விஷயத்திலும் தலையிட வேண்டும்.  சரியான கமிட்டிகளை உருவாக்கி இந்த இரு குற்றச்சாட்டுகளின் மீதும்  முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.  ஆராய்ந்து உண்மை நிலையை, தீர்வுகளை கொண்டு வரவேண்டும்.   

இனி.. ஒரு போதும்.. எக்காலத்திலும்.. இன்னும் ஒரு மாணவர் சாவு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.. தடுத்தே ஆக வேண்டும்..!!

இதெல்லாம் நடக்காது.. அதெல்லாம் செய்ய மாட்டோம்.. ஒவ்வொரு ஆண்டும்  இப்படி அப்பாவி மாணவச் செல்வங்கள் இறந்துதான் போகவேண்டும்.. அதனை நாம் எல்லாம் வேடிக்கை தான் பார்க்க போகிறோம்.. என்றால்..

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

இந்த நாட்டிற்கு சாபம் இறங்கக்கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை...!!!

(இப்பதிவு அந்த இறந்த அப்பாவி குழந்தைகளுக்கு நடந்த அநீதிக்கு எதிராக நான் எழுப்பும் ஒரு சிறிய குரல், எடுத்து வைக்கும் ஒரு சிறிய கல்! இப்படி ஒரு அட்டூழியம் நடந்து கொண்டிருக்கும்போது என்ன செய்தீர்கள் என்று நாளை வரக்கூடிய சமுதாயம் நம்மை பார்த்து காறி உமிழும்போது என்னை தற்காத்து கொள்ள உருவாக்கபட்ட ஒரு சிறிய கேடயம்!) 

Comments

Popular posts from this blog

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

நம்ம வீட்டுப் பிள்ளை

ஏன் இந்த தயக்கம்..?