ஏன் இந்த தயக்கம்..?

Views

PSBB பள்ளி விவகாரத்தை முதலில் வெளியில் கொண்டு வந்தது ஒரு முன்னாள் மாணவி, அதற்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டு மஹாரிஷி வித்யா மந்திர் என்ற பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார்களை கொடுத்ததும் முன்னாள் மாணவர்கள், அதே போல் மேட்டுப்பாளையம் SSVM என்ற பள்ளியின் ஒரு ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவியுடன் ஃபேஸ்புக்கில் நடத்திய பாலியல் அரட்டையைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதும் அந்த முன்னாள் மாணவி தான். 

இந்த புகார்களில் எல்லாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தீர்களா..? இந்த சில நாட்களில் வெளிவந்த பெரும்பாலனா புகார்களை சொன்னது எல்லாமே முன்னாள் மாணவிகள் தான்!

அப்படி என்றால் அந்த ஆசிரியர்களைப் பற்றி ஏன் இந்நாள் மாணவிகள் யாரும் வாய் திறக்கவில்லை..? 

அவைகள் இப்போது நடப்பது இல்லையா அல்லது இந்நாள் மாணவிகளுக்கு அதனை வெளியே சொல்ல பயமா..?

இந்த செய்திககளைப் பார்த்ததும் எனக்கு உடனே எழுந்த கேள்வி இது தான். 

Image source: drsuneettayal.com/Google images

PSBB விவகாரத்தில் இந்நாள் மணவிகள் தான் அந்த முன்னாள் மாணவிக்கு புகார்களை கொண்டு சென்று, பிறகு அம்மாணவி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அது வைரல் ஆகி, பலராலும் கண்டிப்பட்டதற்குப் பிறகு பிறகு தான் இந்நாள் மாணவிகள் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 

ஆகையால் நான் மேலே கேட்ட கேள்விக்கு.. அதாவது இந்நாள் மாணவிகள் இவைகளை பற்றி வெளியே பேசாதத்தர்க்குகே காரணம் பெரும்பாலும் பயமே என்று புரிந்து கொள்ளலாம். 

இந்த மாணவிகளில் எத்தனை பேர்கள் தனக்கு ஏற்பட்ட இந்த விவகாரங்களை பெற்றோர்களுக்கு கொண்டு சென்றுள்ளார்கள் என்று தெரியவில்லை. கண்டிப்பாக சிலராவது இருக்கும், அப்படி இருந்தும் ஏன் பெற்றோர்கள் இவைகளை பற்றி அவைகள் நடந்தபோதே புகார் அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. 

சரி.. இந்நாள் மாணவர்களுக்கும், தெரிந்தும் புகார் அளிக்காத அந்த ஒரு சில பெற்றோர்களுக்கும் அப்படி என்ன பயம்..? 

1. "நாம இத சொல்லப் போய் அந்த டீச்சர் அல்லது நிர்வாகம் இன்டர்னல் மார்க்ல கை வைச்சுட்டா..?" என்ற அந்த பாழாப்போன இன்டர்னல் மார்க் பயம். 

2. நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அப்பறம் எப்படி நான் / நம் குழந்தை அந்த ஆசிரியரிடம் மீண்டும் படிப்பது...? 

3. ஒரு வேளை நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இதற்காகவே நம்மை டார்கட் பண்ணினால் என்ன செய்வது.? வேறு பள்ளிக்கு ஆண்டின் இறுதியில் அல்லது பாதியில் எப்படி சென்று சேருவது. (PSBB பள்ளியில் அந்த மாணவிகளில் சிலர் முதலில் நிர்வாகத்திற்கு புகார் அளித்து, அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் வேறு வழியின்று முன்னாள் மாணவியை நாடி உள்ளார்கள்)

இப்படி கல்வியை உயிருக்கு நிகராக நினைத்து ஒரு வருடம் போனால் வாழவே முடியாது என்ற முட்டாள் தனமானான, கோழைத்தனமான காரணங்களே சிலர் பல்லை கடித்துக்கொண்டு அமைதி காப்பதற்கு பெரும்பாலும் காரணங்களாக இருக்கும். 

வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாணவி இது போன்ற பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் போது அது அந்த குழந்தையின் சீரிய மனநிலையை, ஒட்டுமொத்த எதிர்காலத்தை பாதிக்கும். ஏன்.. சில பிள்ளைகள் பாலியல் தூண்டுதல்களுக்கும் ஆளாகலாம். இவைகள் எல்லாம் இடையில் வேறு பள்ளியை மாற்றுவதால் அல்லது ஒரு வருட கல்வியை விடுவதால் ஏற்படும் பாதிப்புகளை விட மிக மோசமானது என்பது அப்பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

ஆகையால் அந்த சில பெற்றோர்கள் தன் பிள்ளைகள் மூலம் இத்தகைய விஷயங்கள் நடப்பது தெரிந்தால் அமைதி காக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அடுத்த கோணம்.. பள்ளியில் நடக்கும் இது போன்ற விஷயங்களை சில பிள்ளைகள் பெற்றோர்களிடம் கொண்டு செல்வதே இல்லை என்பதற்கும் அதிகமான வாய்ப்புகள் உண்டு. 

அதனை தவிர்க்க..

1. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான, குறிப்பாக வயது வந்த பிள்ளைகளுக்குமான இடைவெளி எவ்வளவு குறைந்து இருக்குமோ அவ்வளவு நல்லது. 

ஒரு மெட்ரோபொலிட்டன் நகரத்தில் வசிக்கும் என் ஒத்தவயது நண்பன் ஒருவன் ஒருமுறை பேசும்போது "பரவா இல்ல ரஃபீ உன் குழந்தைக உன் பேச்ச கேக்குது.. ஆனா என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்ச கேக்கறதே இல்ல.. நான் career (தொழில்) விஷயத்திலேயே அதிகம் கவனம் செலுத்தி என் பிள்ளைகளோடு க்ளோஸ் ஆகாம விட்டுட்டேன்.. இப்பதான் அது எவ்வளவு தப்புன்னு புரியுது.. இனி மேலாவது அத சரி செய்யணும்..." என்று சொன்னான்.

இந்த ஒரு வாக்கியம் போதும்.. எல்லாத்தையும் சொல்லிவிட்டது. 

2. உங்கள் வயது வந்த பிள்ளைகளிடம் வயதுக்கு வந்ததும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், எதிர் பாலின ஈர்ப்பு (Opposite gender attraction), மற்றும் அது போன்ற, தேவையான விஷயங்களை சொல்லிக் கொடுங்கள். மற்றவர்கள் தவறாக சொல்லிக் கொடுக்குமுன் அல்லது தானாகவே தவறாக புரிந்துகொள்ளும் முன் நாம் சரியான முறையில் சொல்லி தருவது தானே சிறந்தது. 

3. இது போன்ற பள்ளி விவகாரங்கள் மற்றும் இது போன்ற நாட்டு நடப்புகள் நடக்கும்போது அவைகளை பற்றி பிள்ளைகளிடம் தெரியப்படுத்துங்கள், அது போன்ற சந்தர்ப்பங்களில் தான் எப்படி நடந்து கொள்வது என்று சொல்லித் தாருங்கள். இது ரொம்ப ரொம்ப முக்கியம். இது போன்ற விவகாரங்களை பெற்றோர்களிடம் தைரியமாக, மறைக்காமல் தெரியப்படுத்த வேண்டும் என்று தைரியம் கொடுங்கள். மார்க் போச்சுன்னா டேஸ் போச்சு..வளரும் ஒரு குழந்தைக்கு வாழ்க்கையில் மனநலமும், மானமும் தான் முக்கியம் என்பதை சொல்லிக் கொடுங்கள். 

4. இது போன்ற விவகாரங்கள் மட்டும் இல்லை.. பள்ளியில், வகுப்பில், தன் தோழமைகளுடன் என்று அவர்கள் உலகில் நடக்கும் எல்லா விதமான நல்ல, கெட்ட மற்றும் சாதாரண விஷயங்களையும் பெற்றோர்களிடம் ஒரு பிள்ளை பகிர்ந்து கொள்ளுமளவுக்கு அந்த பிள்ளையுடன் நீங்கள் நெருக்கமாக இருக்க வேண்டும். (சில விஷயங்களில் பெண் பிள்ளை என்றால் அம்மாவிடமும், ஆண் பிள்ளை என்றால் அப்பாவிடமும்.)

இப்படி இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்கலாம். 

இது போன்ற அணுமுறைகளை கையாளும்போது நம் குழந்தைகள் பள்ளியில் நடக்கும் இது போன்ற ஆபத்தான விஷயங்களை நம்மிடம் மறைக்கும் விஷயங்கள் 99% சதவீதம் நடைபெறாது.

Comments

Popular posts from this blog

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

நம்ம வீட்டுப் பிள்ளை