சந்திரயான் 2 க்காக தமிழகம் தந்த 'கொஞ்சம் நிலவு'!

Views
இதுவரை எந்த நாடும் சென்றிராத நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஆய்வுகள் செய்ய முதன் முதலில் செல்லும் சந்திரயான் 2  விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியர்கள் அனைவரும் மட்டுமல்ல, விண்வெளியின் அதியசங்களை, இரகசியங்களை தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்றால் அது மிகையாகாது.  அதற்காக உழைத்த இஸ்ரோவின் (ISRO) அனைத்து உறுப்பினர்களுக்கும், உறுதுணையாக நின்ற அனைவருக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.  

இந்த திட்டத்தின் நோக்கம் என்ன, ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது, எப்படி இது வேறு யாரும் செய்திராதது போன்ற தகவல்களைப் பற்றியெல்லாம் நாம் இங்கே பேசப் போவதில்லை. அவைகளைப் பற்றி தெரியாதவர்கள் வேறு செய்தி தளங்களில் படித்துக் கொள்ளலாம். 

ஆனால்.. இந்த மகிழ்ச்சிகரமான வேளையில்.. இந்த சாதனை பயணத்திற்கான ஏற்பாடுகளில் நடந்த ஒரு சுவராஸ்யமான,  குறிப்பாக தமிழர்கள் மகிழக்கூடிய ஒரு சம்பவத்தை பற்றித் தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.   

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் காட்சி

நிலவுக்கு சென்று ஆய்வு செய்யும் சந்திரயான் 2 செயலாக்கம் (mission) என்பது நான்கு முக்கிய உபகரணங்களை உள்ளடக்கியது.  அவைகள் : 
  1. Launcher எனப்படும் ஒரு ராக்கெட்.  பெயர் : GSLV Mk-III
  2. Orbiter எனப்படும் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றக் கூடிய ஒரு சுற்றி இயந்திரம். 
  3. Lander எனப்படும் இந்தியாவிலிருந்து முதன் முதலாக நிலவில் இறங்கபோகும் ஒரு இயந்திரம். பெயர் : விக்ரம்  (இது சீயான் விக்ரம் அல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் தந்தையாக கருதப்படும் Dr விக்ரம் அ  சாராபாய் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது)   
  4. Rover எனப்படும் நிலவில் ஊர்ந்து சென்று ஆராய்ச்சி செய்யப் போகும் ஒரு ரிமோட் கார் போன்ற ரோபோ வாகனம். பெயர் : ப்ரக்யான் (Pragyan) ("ஞானம்" என்று பொருள் தரும் சமஸ்கிருத வார்த்தை. ஏன் சமஸ்கிருதத்தில் பெயர்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு (எனக்கும் அக்கேள்வி எழுந்தது) சில கூடுதல் தகவல்கள்: திட்டங்களின் பெயர்களை இஸ்ரோ வைப்பதில்லையாம்.. வான்வெளி ஆராய்ச்சி துறைக்கு எப்போதும் தலைவர்களாக இருப்பது பிரதம மந்திரிகள் தானாம், அவர்கள் தான் பெயர்களை வைப்பார்களாம்.  முதன் முதலில் சந்திரயான் 1 திட்டத்தின் போது இஸ்ரோ பரிந்துரைத்த பெயர் வேறாம்.. அப்போது இருந்த பிரதமர் வாஜ்பாய் தான் சந்திரயான் என்ற சம்ஸ்கிருத பெயரை வைத்தாராம்.  மங்கல்யான் பெயரை வைத்தது அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்.  ஆகையால் அந்த பெயர் அரசியலுக்குள் நாம் இப்போது போகவேண்டாம்.)
இப்பதிவு பேசப்போவது இந்த ரோவர் என்ற நான்காவது இயந்திரம் தொடர்பான ஒரு தகவலைத்தான். 

இந்த 27 கிலோ எடையுள்ள ரோவர் இயந்திரத்தின் கட்டுமானப் பணி முடிந்ததும்  அதன் சோதனை இயக்கத்தை (Testing / Dry run) செய்து பார்க்க வேண்டும்.  அதாவது அதனை ஒட்டி சரியாக ஓடுகிறதா, அதன் கேமிராக்கள் சரியாக படங்களை எடுக்கிறதா, டெலஸ்கொப்புகள் இயங்குகிறதா, இப்படி இன்னும் பல வேலைகளை செய்கிறதா என்று பரிசோதித்து பார்க்கவேண்டும். 

இதில் முதல் பரிசோதனையான ரோவரின் ஓட்டத்தை பரிசோதனை செய்ய.. ஏதோ விளையாட்டு ரிமோட் கார்களை ஓட்டுவது போன்று நம் வீடுகளில் அலுவகங்களில் இருப்பது போன்ற Veritified tiles அல்லது மார்பில் தரைகளில் ஒட்டி பார்த்து பரிசோதிக்க கூடாது. ஏனென்றால் நிலவில் இன்னும் டைல்ஸ் போட்டு யாரும் வீடுகள் அல்லது அலுவலகங்கள் கட்டல. அங்கு இன்னும் கரடு முரடான பாறைகளும், சிறிய கற்களும், மணல்களும் நிரம்பிய இடம் தான் நிலாவின் பூமி.. சாரி.. நிலாவின் நிலம். 

ஆகையால் அது போன்ற ஒரு நிலத்தில், அல்லது நிலத்தை உருவாக்கி ரோவரை பரிசோதிக்க வேண்டும். 

இங்கே தான் இஸ்ரோவுக்கு ஒரு முக்கிய பிரச்சனை வந்தது.  

பூமியின் மேற்பரப்பும், நிலவின் நிலத்தின் மேற்பரப்பும் முற்றிலும் வெவ்வேறானவை.  நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பாறைகள், கற்க்கள்,  பள்ளங்கள், மணல் மற்றும் தூசுகளும் பூமியில் இருப்பவைகளும் அமைப்பில் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவை (different texture).  ஆகையால்.. நாம் ரோவரை பூமியின் மேற்பரப்பில் உள்ள சாதாரன கற்க்கள், பாறைகள், மணல்கள் கொண்ட நிலத்தின் மீது ஓடவைத்து பரிசோதனை செய்ய முடியாது.  அதற்கு நிலவு போன்ற மேற்பரப்பை (Artificial Moon surface) உருவாக்கி தான் சோதனை செய்ய வேண்டும். 

இந்த நிஜ நிலவு மேற்பரப்பின் கொஞ்சம் மணல்களை / படிவங்களை தற்சமயம் வைத்திருக்கும் ஒரு நாடு.. வேறு யாரு.. நம்ம அமேரிக்கா தான். 

அமெரிக்காவின் அப்போல்லோ விண்கலம் நிலவுக்கு சென்று போது சேகரித்த மணலும், நிலவிலிருந்து விழும் விண்கற்களையும் கொஞ்சம் சேகரித்தும் வைத்திருக்கிறார்கள். 

இந்த நிஜ நிலவு மண்ணை அமெரிக்காவிலிருந்து கொண்டு வருவதென்றால் அது விலை அதிகம் பிடிக்கும் சமாச்சாரமாம். 

அதாவது அமேரிக்காவிலிருந்து கொண்டு வர ஒரு கிலோ மணலுக்கு / படிவத்திற்கு ஆகும் செலவு 150 டாலர்கள்.  ஆனால் நமக்கு தேவையானதோ 60 - 70 டன் மண். அந்த அளவு அவர்களிடம் இல்லையென்றாலும் அமெரிக்கவிலிருக்கும் நிலவு மண்ணை கணிசமான அளவிற்கு கொண்டு வருவது என்பது அதிக செலவு புடிக்கும் காரியம்.

சந்திரயான் 2 (என்ற இந்த அதி முக்கிய திட்டத்திற்கான) பட்ஜெட் 978 கோடி ரூபாய்கள். (வல்லபாய் பட்டேல் சிலைக்கான பட்ஜெட் 2989 கோடிகள். அஹமதாபாத் to மும்பை புல்லட் இரயில் பட்ஜெட் 1.1 இலட்சம் கோடிகள்..  ஹி..ஹி.. ஒரு பொது அறிவு தான்.. :) :) )

இப்போது என்னடா செய்வது என்று இஸ்ரோ மண்டையை உடைத்துக் கொண்டிருந்த போது தான்.. இந்தியாவின் சில தேசிய கல்வி நிறுவங்களின் புவியியலாளர்கள் ஒரு நற்செய்தியை இஸ்ரோவுக்கு கொண்டு வந்தார்கள். 

அவர்கள் சொன்னது இது தான்:

நமது பூமியில் வெகு சில இடங்களில் மட்டும் அனார்தசைட் (Anorthosite) என்ற ஒரு அபூர்வ வகை பாறைகள் காணப்படுகின்றன. அவைகள் நிலவின் பாறைகளைப் போன்ற வேதியியல், கனிம தன்மைகளை கொண்டது என்ற ஒரு முக்கிய தகவலை சொன்னார்கள். அப்பாறைகள் 90% கனிமங்களை உள்ளடக்கியவைyaam. 

இவைகள் பூமியில் வெகு சில இடங்களில் மட்டும், நிலவின் மேற்பரப்பில் பெரும்பான்மையாக இருக்கும் பாறைகள்.    

இவ்வகை பாறைகள் அபூர்வமாக காணப்படும் உலகின் அந்த ஒரு சில இடங்களில் ஒரு இடம் தான் இந்தியாவிலேயே நம் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தின் அருகில் உள்ள சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை என்ற கிராமங்கள். 

இவ்வகை பாறைகள் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் சிறுகற்கள் போன்று ஒளிரும் தன்மை கொண்டது போல் இருப்பதால் இந்த கிராமத்தில் உள்ள மக்களும் இப்பாறைகளை "சந்திர மண்டலக் கல்" என்றே அழைத்து வந்துள்ளனர். 

இந்த தகவலை எல்லாம் இஸ்ரோவிற்கு ஒருமித்த குரலில் தந்தவர்கள் பெரியார் பலகலைக் கழகம், சேலம், National Institute of Technology, Tiruchi,  Indian Institute of Science, Bangalore, and National Geophysical Research Institute, Hyderabad ஆகிய கல்வி / ஆராய்ச்சி கழகங்களில் பணிபுரியும் புவியியலாளர்கள்.    


அனார்தசைட் (Anorthosite) பாறைகள், சேலம் 

இந்த அரிய தகவலுக்குப் பிறகு உடனே செயலில் இறங்கிய இஸ்ரோ,..  சித்தம்பூண்டியில் இருந்து அறுபது கிலோ டன் அனார்திசைட் பாறைகளை வெட்டி, அதனை தேவையான அளவு சிறுகற்கள், துகள்கள், மணலாக நொறுக்கி சோதனை நடக்கும் பெங்களூரில் இருக்கும் Lunar Terrain Test Facility (LTTF) க்கு கொண்டு வந்துள்ளனர்.  அதனை வைத்து தான் செயற்கை நிலவு மேற்பரப்பான Test bed ஐ அமைத்துள்ளனர். நிலவில் படும் சூரிய ஒளியின் மாதிரியை கொண்டுவர செயற்கை விளக்குகள் உபயோக்கிப்பட்டுள்ளன.     

இந்த செயற்கை மேற்பரப்பை உருவாக்க 25 கோடி ரூபாய்கள் ஆகும் என்று திடமிட்டிருந்தார்கள். ஆனால் இந்த வேலைக்காக அமர்த்தப்பட்ட மேலே சொன்ன கல்வி நிறுவனங்களும், கற்களை நொறுக்கிய நிறுவனமும் இலவசமாக செய்து தந்ததால் மிகவும் குறைந்த செலவில் சோதனை படுக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

அந்த சோதனைக் கூடத்தில் தான் ரோவரை ஒட்டி சோதித்து உள்ளார்கள்.  அதனைத் தான் படத்தில் காண்கிறீர்கள்.  

செயற்கை நிலவு மண்ணில் ரோவரின் சோதனை ஒட்டம்

முதலில் நான்கு சக்கரங்களை கொண்ட ரோவர் தான் உருவாக்கப்பட்டது, இந்த செயற்கை நிலவு மண்ணில் நடந்த சோதனைக்குப் பிறகே ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவராக மாற்றப்பட்டிருக்கிறது.  

சோதனை செய்வதில் உள்ள இன்னொரு பிரச்சினை.. பூமியின் புவிஈர்ப்பு விசையையும், நிலவின் ஈர்ப்பு விசையையும் ஒன்றானதல்ல. அதாவது நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் 1/6 பங்கு தான் இருக்கும் என்பதால் ஹீலியம் வாயு நிரப்பிய பலூன்களை பயன்படுத்தி ரோவரின் எடையை குறைத்து  சோதனை நடத்தப்பட்டுள்ளது.     

ரோவரின் எடையைக் குறைக்க ஹீலியம் பலூனுடன் நடக்கும் சோதனை 

இந்த ரோவர் நிலவில் கிட்டத்தட்ட 14 பூமி நாட்கள் (அதாவது 1 சந்திர நாள்), மொத்த 500 மீட்டர்கள் பயணிக்குமாறு திட்ட்டமிடப்  பட்டுள்ளது. 

ரோவரைப் போலவே விக்ரம் என்ற லேண்டரும் ஒரு சோதனை கூடத்தில் அனார்தசைட் கற்களால் உருவாக்கப்பட்ட பள்ளங்களில், மேடுகளில் landing செய்ய வைத்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல்களை எல்லாம் உலகிற்கு பகிர்ந்தது ஓய்வுபெற்ற, இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஆய்வகத்தின் முன்னாள் இயக்குனர் திரு. M. அண்ணாதுரை அவர்கள்.   

ஆக.. நாமக்கல், சித்தம்பூண்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த "கொஞ்சம் நிலவு" மேட்டர் தான் இப்போது சந்திரயான்  2 விசயத்தில் பேசப்படும் ஒரு சூடான தகவல். 

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..?" என்பது இந்த விசயத்தில் உண்மையோ உண்மை என்று கூறிக் கொண்டு..

இன்னும் உயர உயர பறந்து செல்லுங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளே..
உங்களை ஊக்குவிக்க நாங்களும்..
உங்களோடு பறக்க எங்கள் பிள்ளைகளும் காத்திருக்கிறார்கள்..!!!

💖😊

படங்கள் உதவி : ISRO
மேற்கோள்கள் :

https://www.cnbctv18.com/technology/chandrayaan-2-rover-lander-tested-on-moon-surface-created-with-salem-soil-4029391.htm

https://www.thehindu.com/news/national/isros-lunar-touchdown-has-dry-run-on-soil-fetched-from-tamil-nadu/article28416365.ece

https://www.isro.gov.in/chandrayaan2-home-0

   
  

Comments

Popular posts from this blog

தவறான முன்னுதாரணம்..!

நிலாவுக்குப் பக்கத்தில் ஒரு பலா!

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...