ஜமால் ஹாஷோக்கி எங்கே...? - பகுதி 4

Views
#WhereIsJamalKhashoggi

சரி.. சவூதி ஒத்திகிருச்சு.. எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சிருச்சு.. இனி துருக்கியும், மற்ற நாடுகளும், ஊடகங்களும் அவங்கவங்க வேலையை பாக்க போயிருவாங்கங்கன்னு தான் நினைச்சேன்.. 

ஆனால்.. இதற்குப் பிறகு தான் சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு சில அதிர்ச்சிகர புதிய தகவல்கள் எல்லாம் துருக்கியின் புலனாய்வுகளின் மூலம் வெளியே வந்து கொண்டிருக்கிறது.  

துருக்கியின் முதல் அறிவிப்பு

சவூதி அரசாங்கம் “ஹாஷோக்கி இறந்தது ஒரு விபத்து..” என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டதர்க்குப் பிறகு அக்டோபர் 18 - 20ம் தேதி வாக்கில் முதன் முதலாக துருக்கி அரசு ஒரு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது. 

அதாவது அக்டோபர் 23ம் தேதி ஹாஷோக்கியின் இறப்பு பற்றி ஒரு Naked truth ஐ அதாவது ஒரு வெட்ட வெளிச்ச உண்மையை உலகிற்கு அறிவிக்க போகிறோம் என்று ஒரு அறிக்கை விட்டது. 

உலகம் மீண்டும் பரப்பரபாகியது. 

ஆனால் அதற்க்கு முன்பு அதனை விட மிக அதிர்ச்சியான தகவல் ஒன்று உலகிற்க்கு காத்திருந்தது. 

துருக்கி சொன்ன அந்த 23ம் தேதிக்காக எல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கையில் சரியாக அதற்க்கு ஒரு நாள் முன்னாள் அதாவது அக். 22ம் தேதி, CNN ஊடகம் அனைவரும் உறைந்து போகச் செய்யும் ஒரு புதிய தகவலை வெளியிட்டது. 

என்னைக் கேட்டால் இது வரை வந்த தகவல்களிலேயே இது தான் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவலாக, சினிமா கதைகளை விஞ்சும் அளவுக்கு உள்ளதாக சொல்வேன். 

அப்படி என்ன செய்தியை CNN வெளியிட்டது…?

திரைப்படங்களை போன்று ஹஷோக்கிக்கு டூப்பு 

ஹாஷோக்கி போல வேடம் அணிந்து இன்னொருவரை (ஆங்கிலத்தில் டூப் அல்லது body double என்பார்கள்) ஹஷோக்கிக்குப் பதிலாக ஏற்பாடு செய்து கொலை நடந்த பிறகு இஸ்தான்புல் தெருக்களில் உலவ விட்டிருக்கிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சிகர செய்தியை மறுக்கவே முடியாதபடி ஆணித்தரமான ஆதாரங்களுடன் வெளியிட்டது CNN ஊடகம்.     

அவர்களுக்கு இத்தகவலை துருக்கியின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தந்ததாக கூறி CNN வெளியிட்டது.  

சரி.. CNN வெளியிட்ட அந்த கானொளி ஆதாரத்தில் இருந்த தகவல்கள் என்ன..?

சவுதியிலிருந்த வந்த 15 பேர்களைக் கொண்ட குழுவில் ஹாஷோக்கியைப் போல உடலமைப்பும், கிட்டத்தட்ட அவருடைய வயதுடைய ஒருவரும் வரவழைக்கப்பட்டுள்ளார். அவரின் பெயர் முஸ்தஃபா அல் மதனி (Mustafa al-Madani)

ஹாஷோக்கி தூதரகத்திற்குள் நுழைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவர் அந்த 15 பேர் குழுவின் ஒருவராக தூதகரத்திர்க்குள் வருகிறார்.  

பிறகு ஹாஷோக்கி கொல்லப்பட்ட பிறகு மதனிக்கு ஹாஷோக்கியின் ஆடைகளை அணிய வைத்து தூதரகத்தின் பின் வாசல் வழியாக வெளியே அனுப்புகிறார்கள். அதுவும் வெளியில் உள்ள துருக்கி அரசாங்கத்தின் CCTV கேமராவில் படும்படி. 

ஹாஷோக்கி (இடது), ஹாஷோக்கி டூப்பு மதனி (வலது) Image credit : CNN

மதனியின் உடனே இன்னொருவரும் வெளியில் வருகிறார். அவர் கையில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கிறது. அந்த பையில் தான் மதனியின் அசல் ஆடையை ஆதாவது மதனி தூதரகத்தின் உள்ளே நுழைந்த பொழுது அணிந்திருந்த ஆடையை வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறது CNN. 

பிறகு அவர்கள் இருவரும் ஒரு டாக்ஸியில் ஏறி இஸ்தான்புல்லில் உள்ள உலக பிரசித்திபெற்ற மசூதியான நீல மசூதிக்கு (Blue Mosque) செல்கிறார்கள்.   அங்கே உள்ள கழிவறைக்குள் நுழைகிறார்கள். 

வெளியில் வரும்போது மதனி தன்னுடைய அசல் ஆடைக்கு மாறி உள்ளார். உடன் வந்தவரும் வேறு உடைக்கு மாறி உள்ளார்.  இப்போதும் அவர்கள் கையில் அந்த பை இருக்கிறது. இந்த சமயத்தில் அப்பையில் ஹாஷோக்கியின் ஆடை இருந்திருக்க வேண்டும் என்கிறது CNN. 

பிறகு அங்கிருந்து இருவரும் மீண்டும் ஒரு  டாக்ஸியில் ஏறி ஒரு உணவகம் செல்கிறார்கள். அங்கே உணவு அருந்துகிறார்கள். அங்கிருந்து கிளம்பும்போது வெளியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கையில் வைத்திருந்த பையை போடுகிறார்கள். அதாவது அங்கு தான் ஹஷோக்கியின் ஆடை உள்ள பையை வீசுகிறார்கள். பிறகு அங்கிருந்து வேறு டாக்ஸியில் ஏறி அவர்கள் தங்கி  இருந்த மூவன்பிக் ஹோட்டலுக்கு வருகிறார்கள். தரப்பட்ட வேலை கச்சிதமாக முடிக்கப்பட்ட திருப்தியிலோ என்னவோ சிரித்துக் கொண்டே லிப்டினுள் ஏறுகிறார்கள். 

இதுதான் அந்த வீடியோவில் இருந்த தகவலகள். 

என்ன ஒரு வேலைத்தனம் பார்த்தீர்களா..?
  
CNN வெளியிட்ட அந்த தகவல்களை டைம்லைன் வாரியாக பார்ப்போம்.  (Credits of all pictures in the Timeline: CNN

செவ்வாய், அக்டோபர் 2

03:37 a.m.  மதனி அதாதுர்க் (Ataturk) விமானநிலையத்தில் துருக்கிக்கு வந்தடைகிறார்.

05:05 a.m.  மூவன்பிக் ஹோட்டலில் நுழைவு பதிவு (Check-in) செய்கிறார். 

11:03 a.m.  மதனி சவூதி தூதரகத்தின் உள்ளே நுழைகிறார். அப்பொழுது நீல நிற கட்டமிட்ட சட்டையும், கருநீல நிற காற்சட்டையும், கருப்பு நிறத்தில் ஒரு காலணியையும் அணிந்துள்ளார்.  மேலும் மதனிக்கு உறுதுணையாக அன்று முழுவதும் அவருடன் சுற்றுபவரும் மதனியுடன் உள்ளே நுழைகிறார்.  


01:14 p.m.  ஹாஷோக்கி தூதரகத்தின் உள்ளே நுழைகிறார். 


2:52 p.m.  மதனி ஹாஷோக்கியின் ஆடையில் அதாவது ஹாஷோக்கி அணிந்திருந்த இருள் நிற பிளேசர், பழுப்பு நிற காற்சட்டையும் அணிந்து கொண்டு வெளியே வருகிறார். இப்போது ஹாஷோக்கி போன்று தோற்றமளிக்க ஒரு பொய் தாடியும் வைத்துள்ளார்.  மேலும் மதனியின் அந்த உதவியாளரும் வெளியே வருகிறார். உதவியாளர் இப்பொழுது தன்னுடைய ஜாக்கட்டின் ஹூடால் (hood) தன் தலையை மறைத்துள்ளார்.  அவர் கையில் ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பை வைத்துள்ளார். அதில்தான் இவர்களின் நிஜ ஆடைகள் இருக்கவேண்டும் என்கிறார்களாம் அந்த துருக்கி அதிகாரிகள்.


4:06 p.m.  இப்பொழுது மதனியும், உதவியாளரும் உலக பிரசித்திபெற்ற இஸ்தான்புல் நீலமசூதி வளாகத்தில் தென்படுகிறார்கள்.  


பிறகு அங்கிருக்கும் கழிவறைகளுக்குள் நுழைகிறார்கள். 


4:29 p.m.  இப்பொழுது மதனியும், அவருடைய உதவியாளரும் நீலநிற மசூதியில் தங்களுடைய நிஜ ஆடைக்கு மாறி இருக்கிறார்கள். அவர் வைத்திருந்த பொய்த்தாடியும் இப்போது இல்லை. உதவியாளர் கையில் இருக்கும் பையில் இப்பொழுது ஹாஷோக்கியின் ஆடைகள் இருக்கவேண்டும் என்கிறார்கள் அந்த அதிகார்கள். 


நேரம் தெரியவில்லை :  பிறகு அங்கிருக்கும் ஒரு ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்துகிறார்கள்.     


பிறகு வெளியே உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் ஹாஷோக்கி ஆடை இருந்த பிளாஸ்டிக் பையை போடுகிறார்கள்.


பிறகு அவர்கள் மூவன்பிக் ஹோட்டலுக்கு திரும்புகிறார்கள்.  இப்பொழுது ரிலாக்ஸாக காணப்படுகிறார்கள்.


10:25 p.m.  மதனி தன் ஹோட்டல் அறையை காலி (Check-out) செய்கிறார்.

புதன்,  அக்டோபர் 3

01:25 a.m.   மதனி துருக்கியிலிருந்து வெளியேறுகிறார்.  

இவைகள் தான்  CNN வெளியிட்ட அந்த காணொளியில் இருந்த தகவல்கள்.   

CNN ன் அந்த காணொளி :


CNNன் செய்தி தொகுப்பு: இங்கே

இதைவிட தெளிவாக அக்கு வேறாக, ஆணி வேறாக ஒரு ஆதாரத்தை சமர்ப்பிக்கவே முடியாது. 

சரி.. இந்த டூப்பு ஏற்பாட்டின் நோக்கம் என்ன..? 

இதன் நோக்கமாக துருக்கியின் அந்த அதிகாரிகளும், CNNம் கூறுவது உள்ளே வந்தவர் எங்கே என்று கேட்கும்போது அவர் பின் வாசல் வழியாக வெளியே சென்று விட்டார் என்று CCTV ஆதாரத்தை காட்டுவதர்க்காக செய்யப்பட்ட ஏற்பாடு தான் இது என்று. 

திரும்ப திரும்ப அவர் பின் வாசல் வழியாக சென்று விட்டார் என்று சவூதி அதிகாரிகள் கூறி வந்தது ஏன் என்று இப்போது புரிகிறதா..? 😄 

சரி.. ஏன் அந்த நீல மசூதி..?

ஏனென்றால் அந்த மசூதி உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலம் என்பதால் அங்கே எப்போது மக்கள் கூட்டம் அலைமோதும்… அதனால் அங்கு  ஹாஷோக்கியின் ஆடையில் சென்றுவிட்டு, அங்குள்ள கூட்டத்தில் தொலைந்து விட்டு, பிறகு கழிவறைக்கு சென்று ஆடை மாற்றி வேறு ஒரு ஆடையில் வந்தால் CCTVயினால் கூட அடையாளம் காண முடியாது என்றும், மேலும் ஹாஷோக்கி அங்கே தான் இறுதியாக வந்தார் பிறகு அந்த கூட்டத்தில் தொலைந்து விட்டார், பிறகு என்ன ஆனார் என்றே தெரியாது என்று துருக்கி கூறுவதற்காகவும் எல்லாம் என்று   மஹா புத்திசாலித்தனமாக யோசித்திருக்கிறார்களாம்.  😄

ஆனால் இந்த மஹா புத்திசாலித்தனமான (??) நடவடிக்கை தான் இன்று இவர்கள் மாட்டிக் கொள்வதற்கு ஒரு ஆணித்தர ஆதாரமாக மாறி உள்ளது.

இன்னொரு விஷயம்.. உலகிற்கு Naked trutha ஐ அறிவிக்க போவதாக துருக்கி கூறிய அக். 23ம் தேதிக்கு சரியாக ஒரு நாள், அதாவது அக். 22ம் தேதி தான் துருக்கியின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளால் தரப்பட்டது என்று CNN இந்த body double (டூப்) தகவலை வெளியிட்டது.   

அதாவது அக். 23ம் தேதி துருக்கி கூறப் போகும் உண்மைகளுக்கு ஒரு வலுவான ஆதாரம் சேர்ப்பதர்க்காகவே இந்த தகவலை CNN மூலமாக துருக்கி கசிய விட்டதாகவே இதனை நான் பார்க்கிறேன். 

ஏனென்றால் ஒரு அரசாங்கத்தின் ஏற்பாடு இல்லாமல் ஒரு சில தனிப்பட்ட்ட அதிகாரிகளால் மட்டும் நிச்சயம் இப்படி ஒரு கானொளியையும், தகவல்களையும் உருவாக்கவே முடியாது என்பது அந்த கானொளியை பார்க்கும்போதும், அதில் சொல்லப்பட்ட தகவல்களை படிக்கும்போதும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  

CNN இந்த body doule வீடியோவை வெளியிட்டதும் உலகின் அனைத்து முக்கிய ஊடங்களும் இதனை வெளியிட்டனர்.    

உண்மையில் இந்த ஆதாரம் எர்டோகன் துருக்கி பாராளுமன்றத்தில் கொடுத்த தன்னுடைய அறிகைக்கு ஒரு ஆணித்தரமான ஆதாரமாக அமைந்தது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. 

ஹாஷோக்கி என்ன ஆனார்..? - துருக்கியின் அதிகாரபூர்வ அறிக்கை 

உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அக்டோபர் 23ம் தேதி வந்தது. சொன்னது போலவே எர்டோகன் துருக்கி பாராளுமண்டத்தில் ஹாஷோக்கி மரணத்தை பற்றி ஒரு நெடிய உரையை ஆற்றினார். 

அந்த அறிக்கையில் நாம் இதுவரை பார்த்த தகவல்களைத்தான், அதாவது பெயர் அறிவிக்காத துருக்கி அதிகாரிகள் அவ்வபோது ஊடங்களுகளுக்கு வெளிப்படித்தி வந்த தகவல்களைத்தான் இப்போது அதிகார்ப்பூர்வகமாக சொன்னார். உலகிற்கு அதில் ஒன்றும் புதிய தகவல்கள் இருக்கவில்லை.  ஆனால், அந்த பதினைந்து பேர் கொண்ட குழு, அவர்கள் வந்தது, போனது, அவர்கள்தான் கொன்றார்கள் போன்ற தகவல்களை துருக்கி அரசின் அதிகாரப்பூர்வாக தகவல்களாக அறிவித்தார். 

அவர் சொன்ன வேறு சில முக்கிய விஷயங்களாக இதை சொல்லலாம்..

"அவர் கொலப்பட்ட்டது விபத்து எல்லாம் இல்லை.. திட்டமிட்ட படுகொலை.. " என்று கூறி சவூதி அரேபியாவின் அறிக்கையை புறக்கணித்தார். 

"அவர் துருக்கியில் கொல்லப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்டவர்களை துருக்கிற்க்கு அனுப்பி இங்கே அவர்கள் மீது விசாரணை நடத்தப் படவேண்டும்.." என்றும் சவூதிக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.  

தடை விதித்த அந்த முதல் வீராங்கனை 

ஆம்.. பல நாடுகள் லேசான கண்டனங்களோடும், பல நாடுகள் வெறும் மௌனத்தோடு மட்டும், இவர்கள் எல்லாவரையும் விட அப்படாக்காரரான அமேரிக்கா லேசான கண்டனத்தோடு அந்த  டீல்ல மட்டும் கைவைக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருக்கும்போது முதன் முதலில் கண்டனத்தோடு, தன் நாடு சவுதிக்கு விற்பதாக இருந்த ஆயுத விற்பனைக்கு தடை போட்டு அறிக்கை விட்டார் அந்த வீர பெண் அதிபர்.

அவர் வேறுயாருமில்ல.. சிரியா போன்ற போர்களினால் பாதிக்கப்பட்ட நாடுகளில்  உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதிலும், அது போன்ற நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்வதிலும், மேலும் பாலஸ்தீன் மற்றும் உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல்கொடுப்பதிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமன்றி பல நாடுகளுக்கும் முன்னுதாரமாக இருந்து கொண்டிருக்கும் ஜெர்மன் நாட்டின் அதிபர் ஏஞ்சிலா மெர்கல் (Angela Merkel) தான் அவர். 

மூன்றாவது முறையாக அறிவிப்பை மாற்றிய சவூதி

இதற்கிடையில் சவூதி அரேபியாவின் பப்ளிக் பிராசிகியூட்டர் ஒரு சவூதி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் "துருக்கி தரும் தகவல்களை வைத்து பார்க்கும்போது ஹாஷோக்கியின் கொலை ஒரு திட்டமிடப்பட்ட கொலைதான்.." ("Information from the Turkish side affirms that the suspects in Khashoggi’s case premeditated their crime") என்று அறிவித்தார். 

ஆகையால்..“ஹாஷோக்கி என்ன ஆனாருன்னு எங்களுக்கு தெரியவே தெரியாது, இந்தா.. இந்த வழியே தான் போனாரு..” என்று முதலிலும், பிறகு "அவர் தூதரகத்தில் நடந்த கைகலப்பில் இறந்து போனார், அது ஒரு விபத்து..!" என்றும் இரண்டாவதும் கூறி வந்த சவுதியின் மூன்றாவது அறிவிப்பு இது. 

(ஆற அமர ஒவ்வொண்ணா அறிவிக்கறாங்களா இருக்கும்..  😄 )         

அடுத்த பகுதியில் இந்த தொடர் முடியும் (முடிச்சே ஆகணும்..!! 😄😄) 


    


  




Comments

Popular posts from this blog

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

நம்ம வீட்டுப் பிள்ளை

ஏன் இந்த தயக்கம்..?